குரூப்-4 விடைத்தாள் அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சையாக மாறியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு, கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 13.48 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3.935 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களில் வெளியிடப்படும்.
தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியிடப்பட்டன. இதில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட குரூப்-4 விடைத்தாள் அடங்கிய பெட்டிகளில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுத்தியுள்ளது. அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சையாக மாறியது. ஏற்கனவே மதுரையில் பாதுகாப்பு இல்லாமல் கேள்வித்தாள்கள் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையான நிலையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.