டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,295 பணியிடங்களுக்கு விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் நாளை தேர்வு நடைபெறுகிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை டிஎன்பிஎஸ்சி முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பினாலும் குரூப் 4 தேர்வுக்கு வேறு எந்த தேர்வுக்கும் இல்லாத அளவுக்கு தேர்வர்கள் மத்தியில் மவுசு உள்ளது.
பத்தாம் வகுப்பு கல்வி தகுதிதான் என்றாலும் கூட டிகிரி, மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் கூட இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதை பார்க்க முடியும். விஏஓ , இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒரே ஒரு போட்டி தேர்வுதான்.. கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் நேரடியாக வேலை என்பதால் பலரும் ஆர்வத்துடன் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
நாளை காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன. இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.
வழக்கமாக அரசு தேர்வின்போது வினாத்தாள்கள் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வின்போது வாகனங்களில் பணியில் இருந்த காவல்துறையினர் மூலமாக வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் பஸ்களின் அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Read more: பாடகி ஆஷா போஸ்லே மரணம்..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..! – குடும்பத்தினர் விளக்கம்