நேரடி வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபருக்கு ரூ.1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 20 ஆம் தேதி, நீதிபதி நிர்ஸார் எஸ் தேசாய் தலைமையில் நடைபெற்ற ஒரு நேரடி வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில், சமத் அப்துல் ரெஹ்மான் ஷா என்ற நபர் கழிவறையில் அமர்ந்து கொண்டு ஆஜரானார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
வைரலான அந்த வீடியோவில், அந்த நபர் காதில் புளூடூத் ஹெட்போன்களை அணிந்துகொண்டு கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார். பின் தன்னைத்தானே அவர் சுத்தம் செய்து கொள்வதை வீடியோ காட்டுகிறது. இது அனைவரையும் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.
இதையடுத்து, தானாகவே அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கிய உயர் நீதிமன்றம், ஷா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக தெரிவித்ததையும், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டதையும் கருத்தில் கொண்டு, ரூ.1 லட்சம் தொகையை ஜூலை 22க்குள் நீதிமன்றப் பதிவேட்டில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டது. ஆன்லைன் விசாரணையில் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த வீடியோவை உடனடியாக நீக்கவும், மீண்டும் அத்தகைய செயல்கள் நடைபெறாதவாறு தடை விதிக்கவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கோவிட்-19க்குப் பிறகு குஜராத் உயர் நீதிமன்றம் ஆன்லைன் விசாரணைகளுக்கு அனுமதி அளித்து வருகின்றது. அந்தவகையில் YouTube வாயிலாக நேரடி ஒளிபரப்பும் நடைபெறுகிறது. ஆனால், இச்சம்பவம் நவீன நீதிமன்ற நடைமுறைகளில் இருந்து எதிர்பார்க்கப்படாத ஒரு மோசமான முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டிய நேரத்தில், பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ந்த இச்சம்பவம், நீதித்துறை மரியாதைக்கே கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
Read more: எம்.ஜி.ஆர் – சரோஜா தேவியை பார்க்க குவிந்த 10,000 பேர்.. மறக்க முடியாத ஷூட்டிங்.. எந்த படம் தெரியுமா?