கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். அவர், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) மீது அளித்த புகார், காவல்துறையினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் அளித்த புகாரில், “சித்ரதுர்கா டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் கடிலிங்கப்பா என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் எனக்குப் பழக்கமானார். நாங்கள் இருவரும் நட்பாகப் பழகிய நிலையில், பிறகு அவர் என்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறினார். அதன் பிறகு என்னை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சில காலம் கழித்து, கடிலிங்கப்பா தன்னுடன் பேசுவதைத் முழுவதுமாகத் தவிர்க்கத் தொடங்கியதாகவும், அவரது செல்போனைத் தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, இன்ஸ்டாகிராம் மூலமாக அவர் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
“திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னைப் பாலியல் பலாத்காரம் செய்த கடிலிங்கப்பா, தற்போது திருமணத்திற்கு மறுப்பதுடன், என்னை ஜாதிப் பெயரால் கடுமையாகத் திட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தப் பெண் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் கடிலிங்கப்பா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தற்போது அவரை மகளிர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



