இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அறிமுகம் தேவையில்லை.. தனது வசீகரிக்கும் இசையால் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் ரஹ்யாம்.. இந்திய இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்ற பெரும் ரஹ்மானையே சேரும்.. பாரம்பரிய செவ்வியல் இசையிலிருந்து பாப் இசை வரை அனைத்து வகையான இசையையும் கலந்து மேஜிக் செய்த ஜாம்பவான்.
அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் சிறப்பு வாய்ந்தது. இதயத்தைத் தொடும் இனிமையான இசை மட்டுமல்ல.. உற்சாகமூட்டும் வேகமான துள்ளல் இசையையும் இசையமைத்து ஆட்டம் போட வைத்தவர்.. இந்தியாவில், இசையின் மறுபெயரான ரஹ்மான் என்று உலகளவில் அறியப்படுகிறார். ஏ.ஆர். ரஹ்மான் ஜனவரி 6, அதாவது இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. இந்த சிறப்பு நாளில் ஏ.ஆர். ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களையும் அவரின் சொத்து மதிப்பு குறித்தும் பார்க்கலாம்..
ரஹ்மானின் எளிய தொடக்கம்
சிறு வயதிலேயே குடும்ப கஷ்டத்திற்காக படிப்பை விட்டு இசைத்துறைக்குள் நுழைந்தார் ரஹ்மான்.. இளையராஜா, டி.ராஜேந்தர் ஆகியோரிடம் பணியாற்றிய அவர் பின்னர் விளம்பர படங்களுக்கு இசையமைத்தார்.. பின்னர் 1992-ம் ஆண்டு மணிரத்னத்தின் இசையில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர்.. தனது இசையமைத்த முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த ஏ.ஆர். ரஹ்மான். அதுவரை யாரும் கேட்டிராத ஒரு தனித்துவமான பாணியில் இசையமைத்து ரசிகர்களை மகிழ்வித்த ஒரு இசையமைப்பாளர்.
மனதை வருடும் பாடல்கள் மூலம் இந்தியத் திரையுலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியவர். மணிரத்னத்தின் ‘ரோஜா’ திரைப்படத்தில் தொடங்கிய ரஹ்மானின் இசைப் பயணம் இன்றும் தொடர்கிறது. 30 தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ரஹ்மானின் இசைப் பயணத்தில், எந்த ஒரு இந்திய இசையமைப்பாளரும் எட்டாத உயரங்களை அவர் எட்டியுள்ளார்.
தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில், அவர் மேற்கத்திய இசையைப் பின்பற்றுகிறார் என்று பல விமர்சனங்களை எதிர்கொண்டார். ரஹ்மான் தனது இசை மூலம் அவற்றுக்கு பதிலளித்தார். தான் இசையமைத்த முதல் படத்திற்கே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
ரஹ்மானின் ஆரம்ப வாழ்க்கை
ரஹ்மான் 1967 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ரஹ்மானின் இயற்பெயர் திலீப் குமார். அவரது தந்தை ஆர்.கே. சேகர் ஒரு இசையமைப்பாளர். அவர் தமிழ் மற்றும் மலையாளப் படங்களுக்கு இசையமைத்து வந்தார். ரஹ்மானும் அவருடன் ஒலிப்பதிவுகளுக்குச் செல்வார். அப்போதுதான் அவர் கீபோர்டு வாசிக்கக் கற்றுக்கொண்டார். ரஹ்மானுக்கு 9 வயதாக இருந்தபோது அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் கஸ்தூரி குடும்பத்தை ஆதரித்தார். சில ஆண்டுகள் வீட்டில் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தினார்கள்.
அந்த நாட்களில், ரஹ்மான் தனது பால்ய நண்பர்களான சிவமணி, ஜான் அந்தோணி, சுரேஷ் பீட்டர்ஸ், ஜோஜோ மற்றும் ராஜா ஆகியோருடன் ‘ரூட்ஸ்’ என்ற ராக் இசைக்குழுவை உருவாக்கினார். ரஹ்மான் ‘நெமெசிஸ் அவென்யூ’ என்ற சென்னையைச் சேர்ந்த ஒரு ராக் இசைக்குழுவையும் உருவாக்கினார்.
கீபோர்டு, பியானோ, ஹார்மோனியம், கிட்டார் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதில் ரஹ்மான் ஒரு மாஸ்டர். சின்தசைசர் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஏனென்றால், அது இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஒரு கருவி என்று ரஹ்மான் கூறுவார். ரஹ்மான் இசையமைப்பாளர் மட்டுமல்ல.. ஒரு நல்ல பாடகர், பாடலாசிரியர் மற்றும் பன்முகத் திறமைக் கொண்டவர்..
பல திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதி, அவற்றை அற்புதமாகப் பாடியுள்ளார். ரஹ்மான் தனி இசை ஆல்பங்களையும் இசையமைத்துள்ளார். அவர் கர்நாடக இசை, கவ்வாலி பாணி, ரெக்கே, ஹிப்-ஹாப், ராப், ராக், பாப், ஜாஸ், ஓபரா, சூஃபி, ஆப்பிரிக்க, அரேபிய மற்றும் மேற்கத்திய இசையைச் சிறப்பாகக் கலந்து வழங்குகிறார். தனது முற்றிலும் தனித்துவமான பாடல்களால் அனைவரையும் கவர்ந்த ஒரு இசையமைப்பாளர் அவர்.
இஸ்லாம் மதத்திற்கு மாறிய ரஹ்மான்
1989-ஆம் ஆண்டு ரஹ்மான் தனது குடும்பத்துடன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தனது சகோதரியின் உடல்நிலை குணமாக வேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது ஆசை நிறைவேறியதால், இஸ்லாம் மீதான அவரது நம்பிக்கை அதிகரித்தது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டன. பின்னர் திலீப் குமார், அல்லா ரக்கா ரஹ்மான் (ஏ.ஆர். ரஹ்மான்) ஆனார்.
ஆஸ்கர் நாயகன்
100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தியத் திரைப்படத் துறைக்கு, மதிப்புமிக்க அகாடமி விருது ஒரு கனவாகவே இருந்தது. அந்தக் குறையை ரஹ்மான் போக்கினார். ரஹ்மான் இசையமைத்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜெய்ஹோ’ பாடல் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது.
டைம் பத்திரிகை ரஹ்மானுக்கு ‘மெட்ராஸின் மொஸார்ட்’ என்ற பட்டத்தை வழங்கியது. இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியத் திரைப்படங்களை சர்வதேச அரங்கிற்குப் பெருமையுடன் கொண்டு சென்ற பெருமை ரஹ்மானையே சேரும்.
ரஹ்மான் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்ல. அவர் மிகுந்த தேசபக்தி கொண்டவர். வந்தே மாதரம் பாடலுக்கு அவர் இசையமைத்த மெட்டு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டின் 50வது சுதந்திர தின நிறைவு விழாவின் போது தனது இசைப் பரிசை வழங்கினார். இந்த இசை ஆல்பம் எல்லா காலத்திலும் அதிக காலம் விற்பனையான ஆல்பம் என்ற சாதனையை படைத்துள்ளது. அவர் தேசிய அளவில் ஆறு முறை சிறந்த இசையமைப்பாளர் விருதையும், இந்தி மற்றும் தமிழ் படங்களுக்காக பல ஃபிலிம்பேர் விருதுகளையும், தமிழக அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். மத்திய அரசிடமிருந்து ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்ம பூஷன்’ போன்ற மதிப்புமிக்க விருதுகளையும் பெற்றுள்ளார்.
ரஹ்மானின் சொத்து மதிப்பு
ஏ.ஆர். ரஹ்மானின் சொத்து மதிப்பு ரூ.1,728 கோடி முதல் ரூ.2,100 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.. இதன் மூலம் அவர் இந்தியாவின் பணக்கார இசைக்கலைஞர்களில் ஒருவராக உள்ளார்.
வருமான ஆதாரங்கள்
அவரது செல்வம் பல தசாப்த கால தொழில் வாழ்க்கையில் இருந்து வரும் பல்வேறு வருமான வழிகளின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.. ஏ.ஆர். ரஹ்மான் ஒரு திரைப்படத்திற்கு இசை அமைக்க சுமார் ரூ.8-10 கோடி வரையிலும், ஒரு பாடலுக்கு சுமார் ரூ.3 கோடி வரையிலும் அவர் சம்பளம் பெறுவதாக
நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச சுற்றுப்பயணங்கள் மூலம் அவர் கணிசமான தொகையை சம்பாதிக்கிறார்; ஒரு மணி நேர நிகழ்ச்சிக்கு ரூ.1-2 கோடி வரை கட்டணம் வசூலிக்கிறார். ரஹ்மானின் கூட்டுப்பணிகளும் பிராண்ட் விளம்பரங்களும் அவரது ஆண்டு வருமானத்திற்கு கணிசமாக பங்களிக்கின்றன.
இசை ஸ்டுடியோக்கள்: சென்னை பஞ்சதன் ரெக்கார்ட் இன், ஏஎம் ஸ்டுடியோஸ், துபாயில் உள்ள ஃபிர்தௌஸ் ஸ்டுடியோ மற்றும் லண்டனில் உள்ள கேஎம் மியூசிக் ஸ்டுடியோக்கள் உட்பட, உலகளவில் பல அதிநவீன இசை ஸ்டுடியோக்களுக்கு ரஹ்மான் சொந்தக்காரர்.
ஆடம்பர வாழ்க்கை முறை
“மெட்ராஸின் மொஸார்ட்” மற்றும் “இசைப் புயல்” என்று அழைக்கப்படும் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறார்.. அவர் சென்னையில் ஒரு பிரம்மாண்டமான வீட்டையும், லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பையும் வைத்திருக்கிறார், அது ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவாகவும் செயல்படுகிறது. வோல்வோ எஸ்யூவி, ஜாகுவார், மெர்சிடிஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற உயர் ரக கார்களையும் ரஹ்மான் வைத்திருக்கிறார்.. வரும் நாட்களில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்..



