விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சிக் கோட்டையை உலகப் பாரம்பர்யச் சின்னமாக அங்கீகரித்திருக்கும் `யுனெஸ்கோ’, அது மராட்டிய மன்னரான சிவாஜியின் கோட்டை எனக் குறிப்பிட்டது. இதற்கு ஆராய்ச்சியாளர்களும் தமிழார்வலர்களும் அது தமிழ் மன்னரின் கோட்டை என்று அறிவிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கோனேரி கொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றி கழக தொண்டர்களை கடுமையாக கிண்டல் செய்தார். “உங்கள் கொள்கை என்ன?” என்று கேட்டால், “தளபதி… தளபதி…” என்று கத்துவதாகவும், அது தனக்கு “தலைவிதி… தலைவிதி…” என்று கேட்பதாகவும் சீமான் கிண்டல் அடித்தார்.
மேலும், “சரி எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “TVK… TVK…” என்று கூச்சலிடுவதாகவும், “டீ விற்கவா இவ்வளவு பேர் கூட்டமாக வந்திருக்கிறீர்கள்?” என்று கிண்டல் செய்தார். இதனால் அரங்கம் முழுவதும் சிரிப்பலை ஏற்பட்டது . அதைத்தொடர்ந்து பேசிய சீமான், “புலி வேட்டைக்கு செல்லும்போது வழியில் அணில்கள் ஓடிக் கொண்டிருக்கும்… பத்திரமாக மரத்தில் ஏறிக் கொள்ளுங்கள்… குறுக்கே வராதீர்கள். அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன பெருமை?” என்று விமர்சனம் செய்தார்.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களை “அணில்” என்று அழைத்து கிண்டல் செய்யும் நிலை காணப்பட்ட நிலையில், சீமான் நேரடியாக பொதுக்கூட்ட மேடையில் இதையே கூறியது தவெக தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தவெகவினர், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.