சேலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு விவகாரம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்துப் பேசிய அவர், நிர்வாகச் சீர்கேடுகளால் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, “தமிழகத்திற்கு என ஒரு நிரந்தர டிஜிபி (DGP) கூட நியமிக்கப்படாத நிலையில், காவல்துறை நிர்வாகம் ஸ்தம்பித்து கிடக்கிறது” என்று குறிப்பிட்டர். மேலும், முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலனில் அக்கறை காட்டத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியில் விரிசல் விழ தொடங்கிவிட்டதை சூசகமாக சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் கட்சி விரைவில் திமுகவுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளும் என கூறிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணிக்குப் புதிய மற்றும் பலமான சக்திகள் வரப்போவதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் அதிமுக ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து, மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வது உறுதி என்று அவர் கூறினார்.



