தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களை உண்மையான பயனாளிகளை மட்டுமே சென்றடைய செய்யும் நோக்கில், மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை இன்னும் துல்லியமாகவும், திறமையாகவும் செயல்படுத்தும் வகையில், ஆதார் அடிப்படையிலான அடையாள சரிபார்ப்பு முறையை முழுமையாக அமல்படுத்துமாறு மாநில அரசுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டை வைத்திருப்பவர்களே இந்த சரிபார்ப்பின் மையமாக உள்ளனர்.
கோடிக்கணக்கான மக்கள் இந்த இரண்டு வகையான ரேஷன் அட்டைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இலவசமாக ஒதுக்கீடு செய்கிறது. இந்த உதவி உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய இலக்காகும்.
இதற்காக, ரேஷன் கடைகளில் உள்ள ‘பாயிண்ட் ஆஃப் சேல்’ (PoS) கருவிகள் மூலமாகப் பயனாளர்களின் ஆதார் அடையாளத்தை விரல் ரேகை மூலம் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை, போலி அட்டைகள் உருவாக்கப்படுவதையும், உணவுப் பொருட்கள் முறைகேடாகத் திசை திருப்பப்படுவதையும் கட்டுப்படுத்தும் என்று மத்திய அரசு நம்புகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் இந்த விரல் ரேகை பதிவுப் பணிகள் இன்னும் முழுமையடையாமல் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக, நிலுவையில் உள்ள விரல் ரேகை பதிவுகளை உடனடியாக விரைவுபடுத்தி முடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மீண்டும் ஒருமுறை அழுத்தம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், பதிவுப் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருவதாகவும், எனினும் இந்த செயல்முறைக்கு எந்த ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவும் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை விரைவில் முழுமையடையும்பட்சத்தில், அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களில் உள்ள கசிவுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! ரூ.1,000 உரிமைத்தொகைக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்..!!



