ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பெரியகள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசிபி ஓட்டுநர் நல்லசாமி (38), இவரது நண்பன் சந்திரன் (35). இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு, சந்திரன் தனது தாத்தா, பாட்டியை சொத்து தகராறு காரணமாக கொலை செய்தார். இந்த கொலைக்கு அவரது நண்பரான நல்லசாமியும் உதவியுள்ளார்.
இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த சந்திரன், தனது நண்பன் நல்லசாமியின் மனைவி சிந்தாமணியுடன் (32) கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். மேலும், கணவன் – மனைவி போல் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதற்கிடையே, நல்லசாமி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்து தனது குடும்பத்தினரை சந்தித்தபோது, சந்திரன் தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாகவும், அவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், மனைவியின் மீது சந்தேகம் கொண்ட நல்லசாமி, 2 நாட்களாக அவர்களை கண்காணித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு நல்லசாமியின் வீட்டிற்கு வந்த சந்திரன், நல்லசாமியுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்திரன் வீட்டிற்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நல்லசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டிற்கு வெளியே படுத்துத் தூங்கியுள்ளார்.
அதிகாலை 3.30 மணியளவில், விழித்த நல்லசாமி, வெளியே இருந்த கல்லை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று சந்திரனின் தலையில் போட்டுள்ளார். இதில் சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சந்திரனை கொலை செய்த நல்லசாமியை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.



