மும்பை கோரைக்கான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், மாநகராட்சி நீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஊர்மிளா (44) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ஊர்மிளாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாதபோது அவரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இதற்கிடையே, ஊர்மிளாவின் மகளின் காதலன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றபோது, அவருடனும் ஊர்மிளாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இரண்டு கள்ளக்காதல்களையும் வளர்த்து வந்த ஊர்மிளா, அவர்களுடன் வாழ முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, வீட்டில் இருந்த நகைகளை விற்று, ரூ.10 லட்சம் பணத்தை தனது முதல் கள்ளக்காதலனின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். மேலும், நகைகளில் ஒன்றை மகளின் காதலனுக்கும் கொடுத்துள்ளார். நகைகள் விற்றுத் தீர்ந்ததால், கணவனிடம் மாட்டிக்கொள்வோம் என பயந்த ஊர்மிளா, நகைகளை திருடிவிட்டதாக தனது கணவர் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரமேஷ் தான் நகையை எடுக்கவில்லை என்று வாக்குவாதம் செய்தபோதும், ஊர்மிளா தனது புகாரில் உறுதியாக இருந்தார். ஆனால், ஊர்மிளாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலீசார், அவர் மற்றும் அவரது கணவர் ரமேஷின் செல்போன்களை வாங்கி ஆய்வு செய்தனர்.
அப்போது, ஊர்மிளாவுக்கு இரண்டு ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததும், அவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியதும் தெரியவந்தது. மேலும், அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், ஊர்மிளா உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ஊர்மிளா மற்றும் அவரது கள்ளக்காதலர்கள் என மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.