தூத்துக்குடியை சேர்ந்த 35 வயதுள்ள போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் அந்தரங்க தகவல்களை வைத்து, பணம் கேட்டு அவரது குடும்பத்துக்கு பெண் காவலர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி அளித்த புகாரில், “எனது கணவர் பணிபுரியும் போக்குவரத்து போலீஸ் பிரிவுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாறில் இருந்து ஒரு பெண் போலீஸ் மாற்றுப் பணியாக வந்தார். திருமணமாகி குழந்தைகள் உள்ள அந்தப் பெண் காவலர், ஒரு நிருபருடன் சேர்ந்து என் கணவரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, என் கணவருடன் நெருங்கிப் பழகிய அந்தப் பெண் காவலர், அவர்களது அந்தரங்க உரையாடல்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை செல்போனில் சேமித்து வைத்து, பணம் கேட்டு மிரட்டினார். இந்த காரணங்களால் என் கணவரும், அந்தப் பெண் காவலரும் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த செப்.6ஆம் தேதி, அந்தப் பெண் காவலர் என் கணவர் சம்பந்தப்பட்ட சில ஆடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பின்னர், செப்.17ஆம் தேதி சமாதானப் பேச்சுவார்த்தைக்காக என்னையும், என் உறவினர்களையும் வரவழைத்தார். அப்போது, தன்னிடம் என் கணவர் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட ஆடியோக்களும், 20-க்கும் மேற்பட்ட வீடியோக்களும் இருப்பதாகவும், அவற்றைப் பொதுவெளியில் வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் அவர் மிரட்டினார்” என்று அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
எனவே, அந்தப் பெண் காவலர், நிருபர் உள்ளிட்ட 12 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், கோவில்பட்டி போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெண் காவலர் மற்றும் நிருபர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



