உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆகவன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் சுமார் 8 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சலி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார்.
இதன் மூலம் அவருக்கு அதிக ஃபாலோவர்ஸும் கிடைத்திருந்தனர். ஆரம்பத்தில் கணவர் ராகுலுடன் அவர் ரீல்ஸ் செய்தபோது, சில ஃபாலோவர்ஸ் ராகுலின் தோற்றம் குறித்து எதிர்மறையான கருத்துக்களைப் பதிவு செய்ததால், அஞ்சலி தன் கணவருடன் வீடியோ பதிவிடுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சமூக வலைதளப் பிரபலமான அஜய் என்ற நபருடன் அஞ்சலிக்கு பழக்கம் ஏற்பட்டது. அஜயுடன் சேர்ந்து அஞ்சலி அடிக்கடி ரீல்ஸ் செய்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. ராகுல் வேலைக்குச் சென்ற நேரத்தில் அஞ்சலி தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் இருந்து வந்துள்ளார்.
வழக்கம் போல ராகுல் பணிக்குச் சென்ற நிலையில், அன்று பேருந்தை தவறவிட்டதால் அவர் எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அஞ்சலி, அஜயுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் இருவரிடமும் இதைக் கேட்டு ராகுல் கண்டித்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அஞ்சலி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் ராகுலை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
கொலைக்குப் பிறகு, இருவரும் சேர்ந்து ராகுலின் உடலை ஒரு இருசக்கர வாகனத்தில் வைத்து வாய்க்கால் பகுதிக்குக் கொண்டு சென்று வீசியுள்ளனர். இதற்கிடையே, அஜய் தனது துப்பாக்கியைப் பயன்படுத்தி ராகுலின் மார்புப் பகுதியில் 3 குண்டுகளைச் சுட்டதில் அவரது உடல் சிதைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், முதலில் அஜயை கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரித்தபோது அஞ்சலிக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மனைவியான அஞ்சலியையும் கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



