மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தெற்குராஜன் வாய்க்காலில் கடந்த 20ஆம் தேதி அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த இளைஞரின் உடல், வாய்க்காலில் அடித்துச் செல்லாமல் இருக்க ஒரு பெரிய கல்லுடன் கட்டப்பட்டிருந்தது. உடலின் பல இடங்களில் வெட்டுக் காயங்களும் இருந்தன.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் சீர்காழி அருகே மேல் குத்தவக்கரையைச் சேர்ந்த லட்சுமணன் (35) என்பது தெரிய வந்தது. லட்சுமணன், 8 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
லட்சுமணனின் அண்ணன் ராஜா என்கிற ராமச்சந்திரன், லட்சுமணன் வீட்டுக்கு அருகிலேயே வசித்து வந்தார். லட்சுமணன், தனது அண்ணன் ராஜாவின் இரண்டு மனைவிகளுடனும் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது. ஒருநாள், ராஜாவின் ஒரு மனைவியுடன் லட்சுமணன் உல்லாசமாக இருந்ததை ராஜா பார்த்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா, லட்சுமணனை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் நடந்த பிறகு, ராஜா தனது தம்பியின் இந்த தகாத உறவை மறைக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என ராஜா தெரிவித்துள்ளார். இது லட்சுமணனின் மனைவி அஞ்சலிக்கு தெரியவந்தபோது, ராஜா அஞ்சலியை மிரட்டி, “உன் புருஷனை வெட்டப் போறேன், ரூ.10 லட்சம் கொடு, இல்லையென்றால் வீட்டை விற்றுப் பணத்தைக் கொடு” என வற்புறுத்தியுள்ளார்.
இதனால் பயந்த அஞ்சலி, தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். ராஜாவின் மிரட்டலுக்குப் பயந்து, லட்சுமணன் கடந்த 3 மாதங்களாக சென்னை ஆவடியில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் தலைமறைவாக இருந்துள்ளார். அஞ்சலி, கொள்ளிடம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து இரு தரப்பினரையும் அழைத்துச் சமரசம் செய்தனர்.
ஆனால், சம்பவம் நடந்த அன்று நள்ளிரவில், அஞ்சலி லட்சுமணனுடன் வீடியோ காலில் பேசியபோது, ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் லட்சுமணனை கடத்துவதை பார்த்துள்ளார். பின்னர், ராஜாவுக்கு போன் செய்தபோது, “உன் கணவனை முடித்துவிட்டு உனக்கு போன் செய்கிறேன்” என மிரட்டியுள்ளார். இதனால், பதறிய அஞ்சலி, தனது கணவர் கடத்தப்பட்டதை உறுதி செய்து கொண்டு மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், மறுநாள் காலையில் லட்சுமணனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில், லட்சுமணன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.