டெல்லி மாநிலம் திமர்பூரில் உள்ள காந்தி விஹார் பகுதியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படித்து வந்த 32 வயது இளைஞர் ஒருவர், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர் ராம் கேஷ் மீனா என்று அடையாளம் காணப்பட்டது. முதலில் இதைத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பாகவே காவல்துறையினர் சந்தேகித்தனர்.
ஆனால், ராம்கேஷ் மீனாவின் பெற்றோர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்தக் காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ராம் கேஷ் மீனாவுடன் ‘லிவ்-இன்’ பார்ட்னராக வசித்து வந்த 21 வயது இளம் பெண் ஒருவர் திட்டமிட்டுக் கொலை செய்தது அம்பலமானது.
ராம்கேஷ் மீனா, கடந்த ஆண்டு அப்பெண்ணைச் சந்தித்து, பின்னர் இருவரும் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். இந்தச் சமயத்தில், ராம் கேஷ் மீனாவை தான் தவறாக வீடியோ எடுத்ததாகவும், அதை கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க்கில் சேமித்து வைத்திருந்ததாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீடியோக்களை அழிக்குமாறு அப்பெண் கோரியபோது, ராம் கேஷ் மீனா அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், ராம் கேஷ் மீனாவைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்து, தனது பழைய காதலனிடம் உதவி கேட்டுள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்க, இருவரும் மற்றொருவரை துணைக்குச் சேர்த்துக் கொண்டனர். 3 பேரும் ராம்கேஷ் மீனாவின் பிளாட்டிற்குச் சென்று அவரைக் கொலை செய்துவிட்டு, தீ விபத்து போலக் காட்டுவதற்காக அறைக்குத் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
கொலைக்குப் பிறகுத் தனது போனை அணைத்து வைத்திருந்த அப்பெண்ணை, போலீசார் தீவிர தேடுதலுக்குப் பிறகு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட மேலும் இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.



