திருமணமான ஒரு பெண்ணுடன், அவருடைய சம்மதத்தின் பேரில் பாலியல் உறவு கொண்ட பிறகு, அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தால், அது பலாத்காரம் ஆகாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முந்தைய உறவை ஒரு காரணமாக காட்டி, சம்பந்தப்பட்ட நபரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தவோ அல்லது அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறவோ முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒரு பெண், தன்னுடன் உறவில் இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக கூறி 38 வயது இளைஞர் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்த பெண் ஏற்கனவே திருமணமானவர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தாயார். கடந்த 2009 ஆம் ஆண்டு, அந்த இளைஞர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் பாலியல் உறவு கொண்டதாகவும், 2013-ஆம் ஆண்டு தனது கணவர் இறந்த பிறகும் உறவு தொடர்ந்ததாகவும் அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், அந்த இளைஞர் தனக்கு ஏற்கனவே தாலி கட்டிய நிலையில், தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்றும் எனவே, அவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி திருமணம் செய்ததாக கூறி குற்றவியல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தரப்பில், “அந்தப் பெண்ணின் கணவர் உயிருடன் இருந்தபோதே உறவில் இருந்ததாகவும், மேலும் தங்களுக்கு இடையேயான உறவு தெளிவாக இருவரின் சம்மதத்துடனும் இருந்தது” என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், “திருமணமான பெண்ணுடன் அவர் விருப்பப்பட்டு உறவில் இருந்து பின்பு திருமணம் செய்ய மறுத்தால் அது பலாத்காரம் ஆகாது. கணவர் உயிரோடு இருந்தபோதே அப்பெண் வேறு நபருடன் விருப்பத்துடன் உறவில் இருந்திருப்பது உறுதியாகி உள்ளது. கணவர் இறந்த பிறகு, திருமணம் செய்ய மறுத்தவரை, முந்தைய சம்மத உறவை காரணம் காட்டி, பலாத்காரம் செய்தார் என்று குற்றம் சாட்ட முடியாது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 493 மற்றும் 496 இன் கீழ் மோசடித் திருமணம் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர, பாதிக்கப்பட்ட நபர் முறையான புகாரை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும், அது இந்த வழக்கில் நடக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக அந்த 38 வயது இளைஞர் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More : பைக்கின் பின் இருக்கை மட்டும் ஏன் உயரமாக இருக்கிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்..!!



