கல்லூரி காதலை தவறாகப் பயன்படுத்தி, இளம்பெண் ஒருவரை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த திடுக்கிடும் சம்பவம் கர்நாடக மாநிலம் மகதி நகரில் அரங்கேறியுள்ளது.
மகதி நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தான் பயிலும் அதே கல்லூரியில் படிக்கும் விகாஸ் என்ற மாணவனைக் காதலித்து வந்துள்ளார். தனது காதலன் மீது கொண்ட நம்பிக்கையினால், அவர் அழைத்த இடங்களுக்கெல்லாம் அந்தப் பெண் சென்று வந்துள்ளார். ஒருநாள் விகாஸ் தனது நண்பன் பிரசாந்த் என்பவரது வீட்டிற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் நெருக்கமாக இருந்த தருணத்தில், விகாஸின் மற்றொரு நண்பரான சேத்தன் என்பவர் மறைந்திருந்து அதனை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
அந்தரங்க வீடியோவை எடுத்த பிறகு விகாஸ் மற்றும் அவனது நண்பர்களின் சுயரூபம் வெளிப்பட்டது. “நாங்கள் எப்போது அழைத்தாலும் நீ வர வேண்டும், இல்லையென்றால் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம்” என அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலுக்குப் பயந்து அந்தப் பெண் அமைதியாக இருந்ததை சாதகமாக்கிக் கொண்ட விகாஸ், பிரசாந்த் மற்றும் சேத்தன் ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
தொடர் சித்திரவதையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, ஒருகட்டத்தில் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த அநீதிகளைப் புகாராக அளித்தார். புகாரின் தீவிரத்தை உணர்ந்த போலீசார், உடனடி நடவடிக்கை எடுத்து முதன்மைக் குற்றவாளியான காதலன் விகாஸ் மற்றும் அவனது நண்பர்கள் பிரசாந்த், சேத்தன் ஆகிய மூவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
காதல் என்ற போர்வையில் காதலியைத் தனது நண்பர்களுக்கே விருந்தாக்கிய இந்தச் சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இது போன்ற மிரட்டல்களுக்குப் பயப்படாமல் புகார் அளிக்க முன்வர வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.



