கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் வழக்கறிஞர் ஒருவரை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மங்களூருவைச் சேர்ந்த காவலர் சித்தேகவுடா (32) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு பெங்களூருவைச் சேர்ந்த அந்த இளம் பெண் வக்கீலுக்கும், மங்களூருவில் உள்ள நக்சல் ஒழிப்புப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த சித்தேகவுடாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. திருமண ஆசைகளை கூறி, சித்தேகவுடா அந்தப் பெண்ணை பல்வேறு தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், திருமணத்தை பற்றி அந்தப் பெண் கேட்டபோது, சித்தேகவுடா சாதியை ஒரு காரணமாக சொல்லி அவரை ஒதுக்கியுள்ளார். தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், பெங்களூரு பசவேசுவரநகர் காவல் நிலையத்தில் சித்தேகவுடா மீது புகாரளித்தார்.
புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு, பணிக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்த சித்தேகவுடாவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். பின்னர், அவரை கைது செய்து விசாரித்தபோது, திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும், பிறகு சாதியை காரணம் காட்டி திருமணத்தை மறுத்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.