உத்தரப்பிரதேச மாநிலம் பரசுராம்பூர் பகுதியில் திருமணம் முடிந்து வெறும் 7 நாட்களே ஆன நிலையில், புதுமணப் பெண் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பரசுராம்பூரைச் சேர்ந்த சம்சுதீன் என்பவரின் மகன் அனீஸ் (25) என்பவருக்கும், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ருக்ஷனா (20) என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து ஒரு வாரமே ஆன நிலையில், நேற்று முன்தினம் பகல் 2 மணியளவில், தனது வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த அனீஸை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனீஸின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளி அதே பகுதியைச் சேர்ந்த ரிங்கு (20) என்பது தெரியவந்தது. போலீசார் ரிங்குவை கைது செய்து விசாரணை நடத்தியதில், கொலைக்கான உண்மைக் காரணம் வெளிவந்தது.
ரிங்குவும், ருக்ஷனாவும் கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை அறிந்த ருக்ஷனாவின் பெற்றோர், காதலை எதிர்த்து மகளை மிரட்டி கட்டாயப்படுத்தி அனீசுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணம் முடிந்த பின்னரும், ருக்ஷனா தொடர்ந்து தனது காதலன் ரிங்குவுடன் பேசி வந்துள்ளார். இந்த தொடர்பு பற்றி அறிந்த அனீஸ், தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த ருக்ஷனா, நடந்ததை ரிங்குவிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த ரிங்கு, “அவனை கொலை செய்துவிட்டு உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி, தனது நண்பனை துணைக்கு வைத்துக் கொண்டு அனீஸை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொலை சம்பவத்திற்கு ருக்ஷனாவும் முழுமையாக உறுதுணையாக இருந்துள்ளார். இதன் அடிப்படையில், புதுமணப்பெண் ருக்ஷனா மற்றும் அவரது காதலன் ரிங்கு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருமணம் ஆன 7 நாட்களில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



