பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார்.
நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கரின் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் காலமானார்.
இந்நிலையில், ரோபோ சங்கரின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ பிரபல நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ சங்கர், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, வெள்ளித்திரை வரை தனது தனித்துவ நடிப்பு திறமையால் முன்னேறி வந்தவர். அவரின் இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனறு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.