நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நமது பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் தற்போதைய நவீன உலகில் வாழ்க்கை முறையில் மட்டுன்றி, உணவுப் பழக்கவழக்கங்களிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சொல்லப்போனால் இன்று நம்மைச் சுற்றியுள்ள உணவுகளுள் பெரும்பாலானவை ஆரோக்கியமற்றதாகவே உள்ளன. அதோடு ஒரு நாளில் ஒவ்வொரு வேளையும் நாம் சாப்பிடும் உணவுகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
குறிப்பாக சிலர் இரவு நேரங்களில் தவறான உணவுகளை சாப்பிடுகிறார்கள். இரவு நேரத்தில் நமது செரிமான மண்டலம் மெதுவாக செயல்படும். எனவே இரவு நேரத்தில் நாம் செரிமான மண்டலத்தின் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே நமது ஆரோக்கியத்தை பாழாக்கிவிடும். இப்போது உடல் நீண்ட காலம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால் எந்த மாதிரியான உணவுகளை இரவு தூங்கும் முன் சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
இரவு தூங்கும் முன்பு வயிறு நிறைய எப்போதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிறு நிறைய சாப்பிட்டால், அது வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும். அதுவும் இரவு நேரத்தில் எண்ணெயில் பொரித்த மற்றும் உப்புள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், இம்மாதிரியான உணவுகள் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.
அதிக பானங்களை குடிக்கக்கூடாது சிலருக்கு இரவு தூங்கும் முன், ப்ளாக் காபி, பால் போன்வற்றைக் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் பானங்களை அதிகம் குடிக்கக்கூடாது. அவ்வாறு குடித்தால், இரவு தூங்கும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டியிருக்கும். எனவே இரவு நேரத்தில் திரவங்களை அதிகம் உட்கொள்ளாதீர்.
இரவு நேரத்தில் உப்புள்ள மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் மட்டுமின்றி, காரமான உணவுகளையும் உண்ணக்கூடாது. ஒருவேளை நல்ல காரமான உணவுகளை தூங்கும் முன்பு சாப்பிட்டால், அது தூக்க பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, செரிமான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.குளிர்ச்சியான உணவுகளில் இருந்து விலகி இருக்கவும் குளிர்ச்சியான உணவுகளையும் இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் குளிர்ச்சியான உணவுகளை உட்கொண்டால் எளிதில் சளி பிடித்துக் கொள்ளும். வேண்டுமானால், தூங்குவதற்கு 3-4 மணிநேரத்திற்கு முன் வாழைப்பழம் போன்ற குளிர்ச்சியான உணவுகளை உண்ணலாம்.
மதுவைத் தவிர்க்கவும் பலரும் ஆல்கஹால் அருந்தினால் நன்கு தூங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இரவு தூங்கும் முன் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உண்மையில் ஆல்கஹால் ஒருவரின் தூக்கத்தை தான் பாதிக்கும். குறிப்பாக மது அருந்துவதால் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம் மற்றும் மிகவும் சப்தத்துடன் குறட்டை விடக்கூடும்.