பொதுவாக வெப்பம் நிறைந்த பகுதிகளில் வாழும் போது எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் குளிர்ச்சி அடைந்து சூட்டினால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் சோர்வின்றி ரிலாக்ஸாக உணரலாம். அந்த அளவிற்கு எண்ணெய் குளியல் மகத்துவமானது. எந்தெந்த கிழமைகளில் பெண்கள் மற்றும் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் என்றும் எப்படி குளிக்கலாம் என்றும் இப்பதிவில் பார்க்கலாம்?
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஆண்கள் திங்கள் புதன், சனி போன்ற கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது உடல் சூடு, உடலில் கட்டி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் எண்ணெயை அப்படியே பச்சையாக பயன்படுத்தாமல் சூட்டு உடம்பு உள்ளவர்கள் எண்ணெயை சீரகம் போட்டு காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்க வேண்டும். வாதம் உடம்பு உள்ளவர்கள் எண்ணெயில் பூண்டு போட்டு காய்ச்சி வடிகட்டி தேய்க்க வேண்டும். குளிர்ச்சியான உடம்புள்ளவர்கள் எண்ணெயில் 10 மிளகு போட்டு பத்து நாட்களுக்கு வெயிலில் காய வைத்தால் மிளகின் தன்மை எண்ணெய்யில் இறங்கிவிடும். இதன் பிறகு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடலுக்கு நன்மை தரும்.
மேலும் எண்ணெய்யை காய்ச்சும் போது இரும்பு கடாய் அல்லது இரும்பு பாத்திரத்தில் காய்ச்சி வந்தால் பாத்திரத்தில் உள்ள இரும்பு தன்மை எண்ணெய்யில் சேர்ந்து நம் உடலுக்கு இரும்பு சத்து அதிகரிக்கும். மாதவிடாய் நேரத்திலும் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், எண்ணெய் குளியல் செய்யக்கூடாது.