பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் முக்கியமான நோய்களில் ஒன்று வயிற்றுப்போக்கு ஆகும். இதனால் குழந்தை ஓயாமல் அழுதுகொண்டிருக்கும். உடனடியாக என்ன செய்வதென தெரியாது. அந்த நேரத்தில் இது போன்ற வீட்டு வைத்தியங்கள் கைக்கொடுக்கும்.
இதுவே கிராமமாக இருந்தால் தாய்மார்கள் உரம் விழுந்துவிட்டது என்று கூறி சேலையின் நடுவே போட்டு இரண்டு முனைகளையும் தூக்கிப்பிடித்துக்கொண்டு இப்படியும் அப்படியும் ஆட்டுவார்கள். இன்னும் சிலர் தொக்கம் விழுந்திருக்கிறது என்று கூறி நாட்டு வைத்தியரிடம் சென்று தொக்கம் எடுப்பார்கள்.
இன்னும் சிலர் வயிற்றில் குடல் விழுந்திருக்கிறது, அதனால் தான் குழந்தை அழுகிறது என்று கூறி வயிற்றில் குடல் தட்டுவார்கள். இன்னும் சிலரோ அப்போதைக்கு திடீர் மருத்துவராக மாறி தன் அனுபவங்களைக் கூறி ஒரு வழி பண்ணிவிடுவர். இது போன்ற வேலைகளால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு நிற்காதது மட்டுமன்றித் தேவையற்ற பிரச்னைகள் குழந்தைக்கு ஏற்பட்டு மேலும் பல உபாதைகளில் கொண்டு போய்விடும்.
ஒரு குழந்தை வயிற்றுப் போக்கால் அழுகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்று அறிந்து மருத்துவம் செய்பவர் முறையான மருத்துவர் மட்டுமே. குழந்தைக்கு வயிற்றுப்போக்கு சீதபேதி போன்றவை ஏன் ஏற்படுகின்றது? அதன் மூல காரணம் என்ன? அதனை எப்படித் தடுப்பது, அடுத்து வராமல் எப்படித் தற்காப்பது போன்ற செய்திகளை நம் மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர். கண்ணன் அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
வயிற்றுப் போக்கு என்றால் என்ன…? இது எல்லோர்க்கும் தெரிந்ததுதான். தண்ணி தண்ணியாக நாள் ஒன்றுக்கு மூன்று முறைக்கும் மேலாக ஒரு குழந்தை மலம் கழித்தால் அது வயிற்றுப்போக்கு எனப்படும்.
சீதபேதி என்பது என்ன…? அதே திரவத்தன்மையுடன் ரத்தம் மற்றும் சளிபோன்ற கோழைகளுடன் மலங்கழிப்பது சீத பேதி எனப்படும்.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன..? அடிக்கடி திரவமாக மலம் கழிவதால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்துபோகும். சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுப்பொருள்கள் குறைந்துபோகும். இதனால் சத்துக்குறைந்து குழந்தை சவலையாகிவிடும். குழந்தைகள் சவலையாவதால் மிகுந்த பாதிப்பு உண்டாகும்.
இவை என்ன காரணங்களால் ஏற்படுகிறது?
இவை கீழ்கண்ட கிருமிகளால் ஏற்படுகிறது.
- 1. ரோட்டா வைரஸ்
- 2. நார்வால்க் வைரஸ்
- 3. கால்சி வைரஸ்
- 4. ஆஸ்டீரோ வைரஸ்
- 5. கொரோனா வைரஸ்
- 6. அடினோ வைரஸ்
- 7. இ கோலை
- 8. ஷிக்கல்லா
- 9. காலரா
- 10. டைபாய்டு பாக்டீரியா
- 11. கேம்பைலோ பாக்டர் கிளாஸ்டிரியம்
- 12. ஜியார்டி யாசிஸ்
- 13. அமீபியாசிஸ்
- 14. வயிற்றுப்புழுக்கள்
அதிகமான வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பாதிப்புகள் யாவை…?
- சுய நினைவில் மாற்றம்,
- கண்கள் குழிவிழுதல்,
- உமிழ் நீர் குறைந்து நாக்கு வறண்டுபோதல்,
- தோல் சுருங்குதல் போன்றவை ஏற்படும்.
- இதன் அறிகுறிகள் யாவை…?
- மலத்தைப் பரிசோதிப்பது, தாதுப்பொருள்களின் அளவை அறிவது, சிறுநீர்ப் பரிசோதனை நிகழ்த்துவதன் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம்.
- பச்சிளம் குழந்தைகளாக இருந்தால் தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கவும். குறிப்பிட்ட வயது வந்த குழந்தைகள் என்றால் சத்து நிறைந்த உணவு கொடுத்தல் போன்றவை இவர்களுக்கான உணவு முறைகளாகும்.
இதனைத் தடுக்கும் முறைகள் யாவை…?
தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தல், பாத்திரங்களை சுத்தமாக உபயோகித்தல், சுகாதரமான உணவு மற்றும் குடிநீர் பருகுதல், சாப்பிடுதவதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவுதல், கழுவி சுத்திரிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல், சுகாதாரமான முறையில் கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற பழக்க வழக்கங்கள் மூலம் வயிற்றுப்போக்கைத் தடுக்கலாம்.
எனவே தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு என்று கண்டறிந்தால் அதற்கான முறையான மருத்துவத்தை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையின் படி தொடர்வதே சிறந்ததாகும். மாறாக தொக்கம் தட்டுதல், குடல் விழுந்துள்ளது என்று குடல் தட்டுதல், ஓயாமல் குழந்தை அழுதால் அது வயிற்று வலியால் கூட இருக்கலாம் என்பதை அறியாமல் உரம் விழுந்துள்ளதாக எண்ணி சேலையில் உருட்டுதல் போன்றவைகளை இன்னும் தொடராதீர்கள். அதனால் குழந்தைக்கு பற்பல உடல் மன ரீதியான பாதிப்பு நிகழும். எனவே முறையான மருத்துவத்தால் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.