நம் உடலில் அத்தியாவசியமாக தேவைப்படும் ஒரு கொழுப்பு மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ். இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது. எனவே ஆற்றலை வழங்க தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் மிக முக்கியமானது.
நம் உடல் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை உறிஞ்சுவதற்கு கொழுப்பு உதவுகிறது. மேலும் கொழுப்பு நம் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க உதவுகிறது, உறுப்புகளைப் பாதுகாக்கிறது, செல் வளர்ச்சியை ஆதரிக்கிறது. கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே நாம் அனைவரும் கொழுப்பை தவறாமல் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.
நாம் எடுத்து கொள்ளும் உணவுகளில் சாச்சுரேட்டட், மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்ற பல வகை கொழுப்புகளின் கலவை இருக்க கூடும்.
பிரபல உணவியல் நிபுணர் கூறுகையில், நமது உடலுக்கு ஆற்றல் கிடைக்க மற்றும் பிற செயல்பாடுகளுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் தேவை. ஆனால் துரித உணவுகள், கிரீம், கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், வறுத்த உணவுகள், கொழுப்பு தின்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்புகள், கொழுப்பு நிறைந்த சாலட் டிரஸ்ஸிங்ஸ் மற்றும் விலங்கு கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்பு மூலங்கள் குறித்து ஒருவர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
பொதுவாகவே நிறைய பிஸ்கட்கள், கேக்குகள், பேஸ்ட்ரிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், கமர்ஷியல் பர்கர்ஸ், பீட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற பிற சுவையான தின்பண்டங்களில் நிறைவுற்ற கொழுப்பு (சாச்சுரேட்டட் ஃபேட்) உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடாமல் கட்டுப்படுத்துவது நல்லது. நாள்பட்ட நோயின் அபாயத்தைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க விரும்பும் ஒருவர் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை சேர்த்து கொள்வதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட உயிர் கொல்லும் நோய் அபாயங்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன,. மேலும் பல நாள்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் அதிக கொழுப்புள்ள உணவுகளால் அதிகரிக்க கூடும். அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு ரத்த நாளங்களில் கொலஸ்ட்ராலை உருவாக்குகின்றன, எல்டிஎல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றன. அதிக எல்டிஎல் கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதம் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிக கொழுப்புள்ள உணவுகள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு முக்கிய காரணமாகும்.
அதிக கொழுப்பு உணவு உட்கொள்ளலுக்கும் பெருங்குடல், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் கருப்பை புற்றுநோய் காரணமாக நிகழும் இறப்புகளுக்கும் கூட தொடர்பு இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறுகையில், டிரான்ஸ்-ஃபேட்டி ஆசிட் என்பது மூளையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகை கொழுப்பு. இறைச்சி மற்றும் பால் போன்ற விலங்கு பொருட்களில் இவை இயற்கையாகவே காணப்படுகின்றன. தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படும் டிரான்ஸ்-ஃபேட்டி ஆசிட்ஸ் ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இது கவலைக்குரியது. இவை ஷார்ட்னிங்ஸ், ஃப்ரோஸ்டிங், சிப்ஸ் மற்றும் கேக், பிஸ்கட் மற்றும் குக்கீஸ் போன்ற பேக்கரி பொருட்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றின் அதிக நுகர்வு அல்சைமர் நோய், மோசமான நினைவாற்றல், குறைந்த மூளை அளவு மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியை உருவாக்கும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்கிறார்.