இந்தியாவில் இதய பாதிப்புகள் இன்று மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை (31%) இதய நோய்களாலேயே ஏற்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இளம் வயதினரிடையே இந்த நோயின் பரவல் அதிகரித்து வருவதற்கு நவீன வாழ்க்கை முறை மாற்றங்களும், மரபணு காரணிகளும் பின்னணியில் இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட ‘மரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கை 2021-2023’ இந்த அபாயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின்படி, நோய்களால் ஏற்படும் மொத்த இறப்புகளில் தொற்றா நோய்களின் பங்கு 56.7%ஆக உயர்ந்துள்ளது. இதில், 30 வயதுக்கும் மேற்பட்டோர் உடல்நல பாதிப்பால் உயிரிழப்பதற்கு இதய நோய்களே (31%) பிரதான காரணமாக உள்ளன.
இதைத் தொடர்ந்து சுவாசத் தொற்றுகள் (9.3%), திசுக்கட்டிகள் (6.4%), மற்றும் சுவாசப் பாதிப்புகள் (5.7%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. உலகளாவிய இதய நோய்கள் இறப்புகளில் இந்தியாவின் பங்களிப்பு 20 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
இதுகுறித்து பிரபல மருத்துவ நிபுணர் அசோக் குமார் பேசுகையில், கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட அமில மாற்றங்களே இதய நோய்கள் அதிகரிக்க முக்கிய காரணம். குறிப்பாக, 30 முதல் 50 வயதுடையவர்களிடம் மாரடைப்பு மரணங்கள் 30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளன.
தொழில் நுட்ப வளர்ச்சியால் வெளி வேலைகள் குறைந்துவிட்டன. சூரிய ஒளி உடலில் படாததால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் தொகுப்பு மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு தொகுப்பு குறைந்து, ரத்தக் கொதிப்பு அதிகரித்து இதய பாதிப்புக்கு வழிவகுக்கிறது. அதேபோல் நேரம் காலம் பார்க்காமல், பொரித்த மற்றும் இனிப்பான உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு மற்றும் இதயக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குச் சாதாரண நபர்களைவிட மாரடைப்பு வர 3 மடங்கு வாய்ப்பு அதிகம். புகைப்பிடித்தால் 4 மடங்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. இறப்புப் பதிவுகளில் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பால் இறந்தாலும், அது இதய பாதிப்பு இறப்பாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதய நோய்களின் பரவலைத் தடுக்க, மருத்துவர் அசோக் குமார் விழிப்புணர்வை முதன்மை தீர்வாக முன்வைக்கிறார். ஒரு காலத்தில் எய்ட்ஸ் (HIV) கட்டுப்படுத்தப்பட்டது போல, அரசாங்கமும் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை வாசகங்கள் இருப்பது போல, உணவுப் பொருட்களிலும் அவற்றின் உள்ளடக்கம் மற்றும் இதய பாதிப்பு குறித்த எச்சரிக்கையை அச்சிட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
இதயத்தைப் பாதுகாக்க, பொதுமக்கள் காய்கறிகள், முழு தானியங்கள், மீன்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சேர்ப்பது, உப்பு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, புகை மற்றும் மது அருந்துதலை நிறுத்துவது, போதுமான தூக்கம் பெறுவது, மற்றும் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.