வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் இன்று அதிகாலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. கடந்த 2 நாட்களாக சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் பெரிதாக மழை பெய்யவில்லை.. ஆனால் இன்று சென்னைக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று காலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. மாலையில் சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.. அதன்பின்னரே வானிலை மையம் இன்று சென்னை, திருவள்ளூருக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அதே போல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் இன்றிரவும் நாளையும் சென்னையில் கனமழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு, சென்னை மற்றும் திருவள்ளூரில் மீண்டும் மிக வலுவான மழை துவங்கி உள்ளது. பொன்னேரி, கவரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அதி தீவிர மழை பெய்து வருகிறது..
புதிய மேகக் கூட்டங்கள் விரைவாக உருவாகிக் கொண்டிருப்பதால், சிறிது நேரத்தில் மழை சென்னை முழுவதும் பரவும் வாய்ப்பு அதிகம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 200 மி.மீ மழை கூட சாத்தியம். நேற்று இதை யார் எதிர்பார்த்தார்கள்! மேகமூட்டம் வந்ததும் கனமழை வரும் என்று நினைத்தேன், ஆனால் இவ்வளவு அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த மழையின் அளவு எல்லோரின் கணிப்பையும் தாண்டுகிறது.
அதிலும் சிறப்பு, நாளை இந்த சுழற்சி இன்னும் சென்னை அருகே வரும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மேலும் ஒரு அதிரடியான, பரபரப்பான மழை நாள் காத்திருக்கிறது. இயற்கை மேலும் ஒரு திரில்லர் தினத்தை இந்த 4 மாவட்டங்களுக்கு தரப்போகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்..



