இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் சாலை அடைப்புகள் மற்றும் மின்சாரம் துண்டிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா, மண்டி, சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, இந்த இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழையால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் சாலை அடைப்புகள் மற்றும் மின்சாரம், குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடையூறுகளை ஆய்வு செய்ய அமைச்சர் ஜகத் சிங் நேகி, நேற்று மூத்த அதிகாரிகளுடன் சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், “மழைக்காலத்திற்குத் தயாராவதற்காக நாங்கள் முன்னதாக மாநில அளவிலான கூட்டத்தை நடத்தியிருந்தோம். தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்கும், தேவைப்படும் இடங்களில் உடனடி மறுசீரமைப்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கும் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுடன் சிறப்பு ஆய்வு நடத்தினேன்” என்று தெரிவித்தார்.
நேற்று மாலை நிலவரப்படி, நிலச்சரிவுகள் மற்றும் சறுக்கல்கள் காரணமாக சுமார் 285 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் செயல்பாட்டில் உள்ளன என்றும், ஆனால் 968 மின்மாற்றிகள் (டிடிஆர்) பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சிம்லாவில் உள்ள ஐஎம்டியின் வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி சந்தீப் குமார் சர்மா கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில், இமாச்சலப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இருப்பினும், மண்டி, காங்க்ரா, பிலாஸ்பூர், சோலன், சிம்லா, ஹமீர்பூர் மற்றும் சம்பா போன்ற மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது” என்று கூறினார். “அதிகபட்சமாக பண்டோவில் (மண்டி மாவட்டம்) 130 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து மண்டி நகரில் 120 மிமீ, சிம்லாவில் உள்ள சுன்னி நகரில் 113 மிமீ, பாலம்பூரில் 80 மிமீ மழை பதிவாகியுள்ளது.
பருவமழை காலத்தில் இதுவரை பெய்த மழைப்பொழிவு முறை குறித்து சர்மா மேலும் விரிவாகக் கூறுகையில், “ஜூன் மாதத்தில் இதுவரை, மாநிலத்தில் இயல்பை விட 34 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. உயரமான மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மாவட்டங்களான கின்னௌர் மற்றும் லாஹௌல்-ஸ்பிதி மட்டுமே இயல்பை விட குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.