கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உல்லாசத்திற்கு ஆசை காட்டி வரவழைத்து, ஒருவரை கத்தி காட்டி மிரட்டிப் பணம் பறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் (27) என்பவர், குந்தாப்புராவில் அப்துல் சவத் (28) என்பவருடன் நட்புறவு கொண்டிருந்தார். இந்த நட்பின் மூலம், அப்துல் சவத் அஸ்மா (42) என்பவரை சந்தீப் குமாருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நாளடைவில் இவர்களின் பழக்கம் நெருக்கமானது.
கடந்த 2ஆம் தேதி, அஸ்மா, சந்தீப் குமாரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதையடுத்து, அஸ்மாவின் அழைப்பை ஏற்றுச் சென்ற சந்தீப் குமாரை, அவர் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த அஸ்மாவின் கூட்டாளிகளான அப்துல் சவத், சைபுல்லா, முகமது நசீர், அப்துல் சத்தார் மற்றும் அப்துல் அஜீஸ் ஆகியோர் சந்தீப் குமாரை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர்.
ஆனால், பணம் கொடுக்க மறுத்த சந்தீப் குமாரை, அந்த கும்பல் கயிற்றால் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். மேலும், அவரது சட்டைப் பையில் இருந்த ரூ.6,200 பணத்தைப் பறித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவருடைய செல்போனைப் பயன்படுத்தி கூகுள் பே மூலம் ரூ.35,000 மற்றும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.40,000 என மொத்தமாக ரூ.75,000 பறித்துள்ளனர்.
பின்னர், நள்ளிரவு 11 மணியளவில், சந்தீப் குமாரை விடுவித்த அந்தக் கும்பல், போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அந்த கும்பலின் மிரட்டலுக்குப் பயப்படாமல் சந்தீப் குமார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்காரின் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையின் முடிவில், 6 குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : திடீரென 37 கிலோ உடல் எடையை குறைத்த இளைஞர்..!! எப்படி சாத்தியம்..? பின்பற்றிய பழக்கங்கள் என்ன..?



