சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தேக்கம்பட்டி பகுதியில், 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த பெரியசாமி (65) என்பவர், தனது மகள் கீதா மற்றும் மருமகன் பெருமாள் வசிக்கும் அருந்ததி காலனிக்கு சில நாட்களுக்கு முன் வந்துள்ளார். மகளைப் பார்க்க வந்த பெரியசாமி, கீதாவின் வீட்டிலேயே தங்கியிருந்த நிலையில், தெருவில் சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பார்த்துள்ளார்.
உடனே கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கிக்கொண்டு வந்த பெரியசாமி, சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி அந்தச் சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சிறுமி அழுதுகொண்டே வந்ததையும், அதைத் தொடர்ந்து முதியவர் அந்தப் பகுதியில் இருந்து வேகமாகச் சென்றதையும் கவனித்த அப்பகுதி மக்கள், உடனடியாக சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் சிறுமியையும், பெரியசாமியையும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர்.
அங்கு சிறுமியிடம் விசாரித்தபோது, தாத்தா சாக்லேட் தருவதாக கூறி தவறாக நடந்துகொண்டதை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், காவல் நிலைய வளாகத்திலேயே முதியவரை சரமாரியாக தாக்கினர். பின்னர், நிலைமையை சமாதானப்படுத்திய போலீசார், முதியவர் பெரியசாமியை உடனடியாக கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.



