திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவரின் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கே. அத்திக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் பெருமாள், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சம்பளம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் கவலையடைந்த குடும்பத்தினர் அவரது செல்போனுக்கு அழைத்துள்ளனர்.
அப்போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஒருவர், “பெருமாள் மயங்கி விழுந்துவிட்டான்” என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் தேடிச் சென்றபோது, நங்காஞ்சி ஆற்றுப்பாலத்தின் அடியில் பெருமாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மேலும், அவரது ஆணுறுப்பு சிதைக்கப்பட்டிருந்ததுடன், தலையில் பெரிய கல்லைப் போட்டு முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டிருந்தது. இது குறித்துத் தகவலறிந்த இடையகோட்டை போலீசார், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, பெருமாளின் நண்பர்கள் மற்றும் சக தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், பெருமாளுடன் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்ரீதர் என்பவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், நண்பர்களான இவர்கள் இருவரும் அடிக்கடி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று நங்காஞ்சி ஆற்றுப் பகுதியில் மது அருந்தியபோது, இருவருக்குள்ளும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஸ்ரீதர், பெருமாளின் தலையில் கல்லைப் போட்டுத் தாக்கியதுடன், அவரது ஆணுறுப்பையும் சிதைத்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தற்போது கைதான ஸ்ரீதரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



