சென்னையில் காய்கறி வெட்டும் கத்தியால் உணவக மாஸ்டரை 3 சிறுவர்கள் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்துாரில் உள்ள அலெக்ஸ் தெருவில் ஸ்டார் மவுன்ட் என்கிற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மதுரையை சேர்ந்த குமார் (வயது 54) என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உதவியாளராக கொருக்குப்பேட்டையை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட 3 சிறுவர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், மாஸ்டர் குமார் குடிபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
சிறுவர்களிடம் அடிக்கடி மது வாங்கி தரும் படி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அதிகாலையில் அசந்து துாங்கி கொண்டிருந்த 3 சிறுவர்களையும் போதையில் குமார் எழுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், காய்கறி வெட்டும் கத்தியால் குமாரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து 3 சிறுவர்களும் தப்பிச்சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த குமார், ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு 15 தையல் போடப்பட்டு, தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 3 சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.