மதுரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத் (26), தனது மனைவி சத்யா (23) மற்றும் 3 வயது மகன் அஸ்வின் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அனஞ்சியூர் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து தனது அண்ணி ஈஸ்வரியையும் (40) அழைத்துக் கொண்டு 4 பேரும் சிட்டம்பட்டி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பூவந்தி அருகே உள்ள அஞ்சுயூர் விலக்கு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த ஒரு போலீஸ் வாகனமும், இவர்கள் சென்ற இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பிரசாத், அவருடைய மனைவி சத்யா, மற்றும் பிஞ்சு குழந்தை அஸ்வின் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஈஸ்வரி மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய அந்தப் போலீஸ் வாகனத்தில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆய்வாளரும் (இன்ஸ்பெக்டர்) ஏட்டு பாலமுருகன் என்பவரும் வந்துள்ளனர். இவர்கள் மதுரைக்கு வந்துவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, சம்பவம் குறித்து அறிந்த அந்தப் பகுதி மக்கள், விபத்துக்கு காரணமான போலீஸ் வாகனத்தின் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்த விபத்து குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : உடல் எடையை மளமளவென குறைக்கும் ரகசிய பொடி..!! வீட்டிலேயே இயற்கையாக தயாரிக்கலாம்..!!



