ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூக நீதி மாணவர் விடுதியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் சக மூத்த மாணவர்களால் ஜாதி ரீதியிலும், மனரீதியிலும், உடல்ரீதியிலும் கடும் சித்திரவதைக்கும் பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த முனியப்பனின் மகன் ஹரி பிரசாந்த் (13) என்ற அந்த சிறுவன், விடுதியில் தங்கிய நாள் முதல் இந்தப் பயங்கர கொடுமைகளை சந்தித்து வந்துள்ளான்.
விடுதியின் அதே அறையில் தங்கிப் படிக்கும் 9, 10, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், இந்த சிறுவனை தூங்க விடாமல் முகத்தில் தண்ணீர் ஊற்றி தொந்தரவு செய்ததோடு, மது அருந்திவிட்டுச் சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த சிறுவனை ஜாதிப் பெயரைச் சொல்லித் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும், தங்களின் சொந்த வேலைகள் அனைத்திற்கும் கட்டாயப்படுத்திப் பயன்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவன் பலமுறை இந்தச் சித்திரவதைகள் குறித்து விடுதியின் வார்டனிடம் புகார் அளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
சக மாணவர்களின் இந்தச் சித்திரவதைகள் எல்லை மீறிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அந்தச் சிறுவனை தாக்கிய மூத்த மாணவர்கள், அதனை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி வீடியோவை பார்த்த சிறுவனின் பெற்றோர்களும், உறவினர்களும் உடனடியாக சிறுவனைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, விடுதியில் தனக்கு நேர்ந்த கொடூரங்களை கண்ணீருடன் கூறியுள்ளான்.
சக மாணவர்கள் தன்னைப் படிக்க விடாமல் தொந்தரவு அளித்ததுடன், எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் தாக்கி அடித்ததாகவும், ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதாகவும் சிறுவன் அழுது கூறியுள்ளான். இதனால் தான் நிம்மதி இழந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான். இதையடுத்து, உடனடியாக பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விடுதி மாணவர்களிடமும், வார்டனிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : மா இலைகளில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..? சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து..!!



