நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. மேடை நிகழ்ச்சிகளில் உடலில் பெயிண்ட்டை தடவி நடித்ததால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுக் காலமானதாக தகவல்கள் பரவின. ஆனால், அவரது மகள் இந்திரஜா அதனை மறுத்து, உடல்நலக்குறைவால் தான் தனது தந்தை இறந்ததாக விளக்கம் அளித்தார்.
இதேபோல, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கும் இந்திரஜா விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில் தான் ரோபோ சங்கர், மரணம் அடைந்த தருவாயில் அவரது குடும்பம் கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவித்துள்ளது என்ற தகவல் தற்போது வெளி வந்துள்ளது.
அவர் பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது நிலைமை மோசமடைந்திருக்கிறது. அந்த இக்கட்டான சூழலில், மருத்துவமனை பில்கள் மற்றும் இறுதிச் சடங்கிற்கான பணம் கூட இல்லாமல், அவரது மனைவி பிரியங்கா ஒரு சின்னத்திரை கலைஞரிடம் உதவி கோரியுள்ளார். அப்போது, பிரியங்கா தனது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி மற்றும் வளையலை கழற்றிக் கொடுத்து, அவற்றை விற்றுச் செலவு செய்யும்படி கேட்டுள்ளார்.
பணம் போதாததால், மகள் இந்திரஜாவும் தனது நகைகளைக் கழற்றிக் கொடுத்துள்ளார். அப்போது அந்தச் சின்னத்திரை கலைஞர், தாலிக்கொடியைத் தவிர்த்து விடும்படி கேட்டுக் கொண்ட பின்னரே மீதமுள்ள நகைகள் விற்கப்பட்டு செலவுகள் ஈடு செய்யப்பட்டதாக பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
ரோபோ சங்கர், புகழ் பெறத் தொடங்கிய பிறகு சென்னை வளசரவாக்கத்தில் சுமார் ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டிற்காக அவர் மாதம் ரூ.1.5 லட்சம் இ.எம்.ஐ செலுத்தி வந்துள்ளார். தொடர்ந்து இ.எம்.ஐ செலுத்தி வந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்கு அதிகளவில் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து வந்த பின்னரும் அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், அவர் தொடர்ந்து 7 மாதங்கள் வீட்டுக் கடனைச் செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.
இறுதியில், தான் மிகவும் விரும்பி வைத்திருந்த இன்னோவா காரை இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.17 லட்சத்திற்கு விற்ற பின்னரே, இந்த நிதிச் சுமை ஓரளவிற்குத் தணிந்துள்ளது. திரைத்துறையில் கலகலப்பான நகைச்சுவையால் அனைவரையும் மகிழ்வித்த ரோபோ சங்கர், தன் தனிப்பட்ட வாழ்வில் இவ்வளவு பெரிய நிதிப் போராட்டத்தை சந்தித்து உள்ளார் என்ற தகவல் அனைவரையும் கலங்க செய்துள்ளது.



