கோடை காலம் தொடங்கிவிட்டாலே வீடுகளில் மின்சார மீட்டர்கள் சுழலும் வேகம் அதிகரித்து விடுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏசி (AC) வாங்குவது இன்று பலருக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. இருப்பினும், ஏசி வாங்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் “கரண்ட் பில் எகிறிவிடுமோ?” என்கிற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே எப்போதும் உண்டு. ஒரு ஏசி எவ்வளவு மின்சாரத்தை உறிஞ்சும், அதை எப்படிப் புத்திசாலித்தனமாக தவிர்க்கலாம் என்பது குறித்த விரிவான விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஸ்டார் ரேட்டிங் மற்றும் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் :
ஏசியின் மின் நுகர்வு என்பது அதன் ஸ்டார் ரேட்டிங்கை (Star Rating) பொறுத்தே அமைகிறது. சந்தையில் கிடைக்கும் 5 ஸ்டார் ஏசிகள் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 1 டன் திறன் கொண்ட 5 ஸ்டார் ஏசி ஒரு மணி நேரத்திற்கு வெறும் 0.8 முதல் 0.9 யூனிட் வரை மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்துகிறது. ஆனால், அதே திறன் கொண்ட 3 ஸ்டார் ஏசி 1.2 யூனிட் வரை செலவழிக்கும்.
அதேபோல், இன்வெர்ட்டர் (Inverter AC) வசதி கொண்ட ஏசிகள் அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப கம்ப்ரசரின் வேகத்தை மாற்றியமைப்பதால், மின்சாரம் வீணாவதைத் தடுக்கின்றன. ஆரம்பத்தில் விலை சற்றே அதிகமாக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் இன்வெர்ட்டர் ஏசிகளே லாபகரமானவை.
மின்சார கட்டண கணக்கீடு :
சராசரியாக ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 7 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், 1 டன் ஏசியை ஒரு மணி நேரம் இயக்கினால் சுமார் 7 ரூபாய் செலவாகும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் ஏசியைப் பயன்படுத்தும் ஒரு குடும்பத்திற்கு, ஒரு மாதத்திற்கு 1,600 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை கூடுதல் மின்சாரக் கட்டணம் வர வாய்ப்புள்ளது. எனவே, பயன்பாட்டு நேரத்தைக் குறைப்பதன் மூலம் இந்தக் கூடுதல் சுமையை தவிர்க்கலாம்.
பயன்பாட்டு முறை :
ஏசியை பயன்படுத்தும்போது சில எளிய வழிமுறைகளைக் கையாண்டால் மின்சாரப் பயன்பாட்டை கணிசமாக குறைக்க முடியும். குறிப்பாக, ஏசியை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைப்பது இதமான குளிர்ச்சியைத் தருவதோடு, கம்ப்ரசரின் வேலையை குறைத்து மின்சாரத்தை சேமிக்கும். அறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சரியாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்வது அவசியம். குளிர் காற்று வெளியேறாமல் இருந்தால் ஏசி அதிக நேரம் இயங்க வேண்டிய தேவை இருக்காது. மேலும், சீரான இடைவெளியில் ஏசியைச் சர்வீஸ் செய்வதும், தேவையற்ற நேரங்களில் மின் இணைப்பை துண்டிப்பதும் மின்சார மீட்டரின் வேகத்தை கட்டுக்குள் வைக்கும்.
Read More : ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா..? அப்ப இந்த சிம்பிள் ட்ரிக்கை தெரிஞ்சுக்கோங்க..!



