பொதுவாக காய்கறிகள் என்பது ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள் என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால், ஒரு சிலர் சுவையை கூட்டுவதற்கு காய்கறிகளை பொரித்து சாப்பிடுகின்றனர். ஆனால், அவ்வாறு சாப்பிடுவது காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை அழித்து, ஆரோக்கியமான காய்கறிகளை கூட கலோரி நிறைந்த பொருட்களாக மாற்றுகின்றன.
காய்கறிகளில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை அழித்து விடுகிறது. அப்படி பார்க்கும்போது பொரித்து சாப்பிட கூடாத காய்கறிகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
கத்திரிக்காய் : கத்திரிக்காயை அதிக அளவு எண்ணெயில் சேர்த்து பொரிக்கும் போது அது அளவுக்கு அதிகமான எண்ணெயை உறிஞ்சும் தன்மை கொண்டதாக மாறுகிறது. இதனால் கத்தரிக்காய் எண்ணெய் பசை மிகுந்ததாக மாறி, குறைவான கலோரி கொண்ட காய்கறியாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற ஒரு உணவுப் பொருளாக மாறுகிறது.
காலிஃப்ளவர் : காலிஃப்ளவரை பொரிக்கும்போது அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அழிக்கப்படுகிறது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த இந்த காய்கறியானது கலோரி அதிகம் மிகுந்த ஒரு தின்பண்டமாக மாறுகிறது.
வெண்டைக்காய் : வெண்டைக்காயை நீங்கள் அதிக எண்ணெய் சேர்த்து மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கும் போது அதில் இருக்கக்கூடிய இயற்கை நார்ச்சத்து பலன்கள் இழக்கப்படுகிறது. அதோடு வெண்டைக்காய் மீது கூடுதல் எண்ணெய் ஒட்டிக்கொண்டு உடலில் தேவையில்லாத கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது.
வெங்காயம் : வெங்காய பக்கோடா சாப்பிடுவதற்கு சுவையானதாக இருந்தாலும் பொரிக்கும்போது வெங்காயத்தில் உள்ள இயற்கை சர்க்கரைகள் கேரமலைஸ் செய்யப்பட்டு, கலோரி மிகுந்த ஒரு பண்டமாக மாறுகிறது.
உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கு சிப்ஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து எடுப்பதால் அது கலோரி மற்றும் அக்ரில்மைடு அதிகம் கொண்ட ஒரு உணவுப் பொருளாக மாறுகிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளது.
கீரை : கீரையை சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கும் போது அதில் இருக்கும் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி போன்றவை இருந்த தடம் தெரியாமல் காணாமல் போகின்றன. மேலும் கீரையில் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு ஒட்டிக்கொண்டு கலோரி அதிகம் கொண்ட ஒரு பண்டமாக மாறுகிறது.
Read More : நாள்பட்ட மூட்டு வலிக்கு இந்த தெரபியை யூஸ் பண்ணி பாருங்க..!! எலும்பியல் நிபுணர் கொடுத்த டிப்ஸ்..!!