கடந்த சில ஆண்டுகளாக தேங்காயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூ.15 முதல் ரூ.25 வரை விற்கப்பட்ட ஒரு தேங்காய், தற்போது ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்துப் பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
2020-21 காலகட்டத்தில் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, தேங்காய் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தேங்காய் மரங்களை பராமரிப்பதையும், புதிய கன்றுகளை நடுவதையும் குறைத்துக் கொண்டனர். இதுவே தற்போதைய விளைச்சல் குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், கடந்த 2022இல் அதிக மழை, 2023இல் கடுமையான வறட்சி மற்றும் 2024-25இல் ஏற்பட்ட கடும் வெப்பம் போன்ற காலநிலை மாற்றங்கள் தென்னை விளைச்சலை பெரிதும் பாதித்துள்ளன. குறிப்பாக, கர்நாடகாவில் 30%, ஆந்திராவில் 25% மற்றும் தமிழ்நாட்டில் 40% வரை விளைச்சல் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் இதே நிலைமை தொடர்கிறது.
ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைக் காலங்களில் தேங்காயின் தேவை அதிகரித்ததால், அதன் விலையும், தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரை ஆகியவற்றின் விலையும் உயர்ந்தது. தேங்காய் உற்பத்தி குறைவு என்பது இந்தியாவுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும் உற்பத்தி குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரு மெட்ரிக் டன் தேங்காய் எண்ணெயின் விலை ரூ.4,23,000 ஆக உள்ளது, இது இரண்டு வருடங்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், உலகிலேயே அதிக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்திய தேங்காய் உற்பத்தியில், கர்நாடகா 28.5% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.