புதுச்சேரி மாநிலம் வம்பாகீரப்பாளையம் அருகே பாண்டி மெரினா செல்லும் சாலையில் நேற்று இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையின் விசாரணையில், கொலையானவர் ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (28) என்பதும், அவர் சுமை தூக்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், இந்த கொலைக்கு கள்ளக்காதல் விவகாரமே காரணம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சந்துரு, தன்னுடன் பணிபுரியும் சக சுமை தூக்கும் தொழிலாளியான வெங்கடேசனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்த நட்பின் காரணமாக, வெங்கடேசனின் மனைவியுடன் சந்துருவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த தகாத உறவு பற்றி அறிந்த வெங்கடேசன், இருவரையும் கண்டித்தும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், சந்துருவைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, வெங்கடேசன், சந்துருவை மது அருந்த தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வெங்கடேசனுடன் அவரது நண்பர்களான சரண் மற்றும் ராஜேஷ் ஆகியோரும் இருந்துள்ளனர்.
மது அருந்தும்போது வெங்கடேசன் கள்ளக்காதல் குறித்து சந்துருவிடம் கேட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சந்துருவை வெட்டிக் கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஒதியஞ்சாலை காவல்துறையினர், இந்தக் கொலையில் தொடர்புடைய வெங்கடேசன், சரண் மற்றும் ராஜேஷ் ஆகிய 3 கொலையாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read More : நீங்கள் உயிரிழந்த பிறகு பீட்சாவுக்கு பணம் கொடுத்தால் போதும்..!! இப்படி ஒரு வினோத விளம்பரமா..?



