தற்போது கந்த சஷ்டி விரதம் தொடங்கியிருக்கும் நிலையில், நம் அனைவராலும் விரும்பிப் பாடப்படும் கந்த சஷ்டி கவசம் பாடலின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் குறித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்தப் பாடலைத் தினமும் ஓதுவதால் உடலில் நேர்மறை ஆற்றல் பெருகி, சுறுசுறுப்பு அதிகரிக்கும் என்றும், அதனால் நம் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. இத்தகைய மன நிம்மதி தரும் வரிகளை வழங்கியவர் தேவராய சுவாமிகள் ஆவார்.
கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு :
ஒருமுறை தேவராய சுவாமிகள் பழனி தண்டாயுதபாணி ஆலயத்திற்கு சென்றபோது, மலையைச் சுற்றிக் கிரிவலம் வந்துள்ளார். அப்போது அங்குள்ள மண்டபங்களில் பலர் பலவிதமான நோய்களால் துன்புறுவதைக் கண்டு மனம் வருந்தினார். அந்த மக்கள் அனைவரும் நலமடைய வேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்டு, முருகப்பெருமானை உருகி வேண்டினார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய பழனி முருகர், “உன் எண்ணம் ஈடேற அருளினோம். பிணிகள் உள்ளிட்ட அனைத்துத் துன்பங்களும் நீங்க, மந்திரமாக ஓதி இன்புற்று வாழும் வகையில் செந்தமிழில் பாடு” என்று ஆசி வழங்கி மறைந்தார்.
முருகனின் இந்த திருவருளைக் கண்ட தேவராயர், “அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!” என்று பரவசத்துடன் ஆடிப் பாடி மகிழ்ந்தார். பின்னர், முருகன் திருவருளை வியந்து போற்றி உடனடியாகப் பாடிய 238 அடிகளைக் கொண்ட பாடலே, இன்றளவும் புகழ்பெற்ற கந்தர் சஷ்டி கவசம் என்னும் மந்திரப் பாடலாகும்.
கந்தர் சஷ்டி கவசம் பாடிய தேவராய சுவாமிகள் யார்..?
கந்த சஷ்டி கவசத்தை பாடிய தேவராய சுவாமிகள், தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும், இவரது தந்தையார் கணக்கராகப் பணிபுரிந்த வீரசாமப் பிள்ளை என்றும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன. முருகனின் திருவருளால் பிறந்த தேவராயர், நன்கு கல்வி கற்று, பின்னர் வியாபார நிமித்தமாகப் பெங்களூரு சென்று வணிகத் தொழிலைத் தொடங்கினார்.
இவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவைப் பெற்று, தான் இயற்றிய கவிதைகளை அவரிடம் காட்டிப் பிழை திருத்தம் செய்து கொள்வாராம். தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம் உள்ளிட்ட பல நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.
தேவராய சுவாமிகள் முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களைப் பாடியதாக அறியப்படுகிறது. தற்போது மக்களால் பரவலாகப் பாடப்படும் கந்த சஷ்டி கவசம், திருச்செந்தூரில் பாடப்பட்டது என்றொரு கருத்து நிலவினாலும், இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் வரும் “பழனிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி” என்ற வரியின் அடிப்படையில், இது பழனியில் பாடப்பட்டது என்று கூறப்படுகிறது.
விரதம் மற்றும் பலன்கள் :
கந்த சஷ்டி விரத நேரத்தில் மட்டுமல்லாமல், தினமும் கந்த சஷ்டி கவசத்தைப் பாடுவது மிகுந்த நன்மைகளைப் பயக்கும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், கதைகளைப் படித்தல் போன்றவையும் சிறப்பு.
கந்த சஷ்டி கவசத்தை தினமும் பாடினால், முருகனின் அருளால் நவகிரகங்களும் நமக்குத் துணையாக நிற்கும். எதிரிகளின் மனம் மாறி நமக்கு நட்புணர்வு உண்டாகும். வீட்டில் உள்ள தரித்திரம், பீடை, செய்வினைகள் ஆகியவை நீங்கி, லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி ஆகியவை உண்டாகும். இதைத் தினமும் பாடுவோருக்குச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.
உடல் மற்றும் மனம் வலிமை பெறுவதோடு, முக வசீகரம் கூடும். முருகனுக்கு உகந்த செவ்வாய் மற்றும் சஷ்டி விரத தினங்களில் மூன்று முறை கவசத்தைப் படித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால், நடக்காது என்று நினைத்த காரியங்கள் கூட நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
Read More : 1300 ஆண்டுகள் பழமையான தேவர்மலை குடைவரை சிவன் கோயில்.. வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும் அதிசயம்..!!



