அஜித்குமார் வழக்கு தொடர்பான நீதி விசாரணையில், நீதிபதி காவல்துறையினரிடம் சரமாரி கேள்வி எழுப்பினார்.
அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக நடந்து வந்த 4-வது நாள் விசாரணை நிறைவடைந்தது. மதுரை 4-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் 4-வது நாளாக விசாரணை மேற்கொண்டார். கடந்த 3 நாட்களுக்கு மேலாக 30 மணி நேரம் விசாரணை செய்தார். முதல் நாளில் கோயில் ஊழியர்களிடமும், 2-வது நாளில் அஜித்குமார் தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சத்தீஸ்வரன், அஜித் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார்.. 3-வது நாளான நேற்று திருப்புவனம் மருத்துவர்கள், அஜித்தின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்களிடம் விசாரணை செய்தார்..
4-வது நாளான இன்று, திருப்புவனம் காவல்நிலைய காவலர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் பணியிடை நீக்கப்பட்ட டிஎஸ்பி சண்முக சுந்தரம், ஏடிஎஸ்பி சுகுமாறன், ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் இன்று விசாரணை நடந்தது.. இந்த விசாரணை 6 மணி நேரத்திற்கு மேல் நடந்தது..
இன்று காவல் ஆய்வாளர் ரமேஷ் குமாரிடம் மட்டும் நீதிபதி 3 முறை விசாரணை நடத்தினார். அப்போது, “நிகிதாவிடம் புகார் பெறப்பட்டதா? தனிப்படை காவலர்கள் 6 பேரும் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தனர்? தனிப்படை காவலர்கள் யாருக்கு தகவல் கொடுத்தனர்? நிகிதாவிற்கு முறையாக எஃப்.ஐ.ஆர் கொடுக்கப்பட்டதா? அஜித்குமார் வலிப்பு வந்து இறந்ததாக எந்த அடிப்படையில் எஃப்..ஐ.ஆர் போட்டீர்கள்..? எஸ்.பி இதுகுறித்து முறையாக விசாரித்தாரா? அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா? ” என நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் ஒரு பென் டிரைவை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார். அதில் காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது.. அதே போல் டிஎஸ்பி சண்முக சுந்தரத்திடம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் விசாரணை அறிக்கையை நீதிபதி தயார் செய்ய உள்ளார்.
Read More : வசமாக சிக்கும் நிகிதா.. பாய்கிறது நடவடிக்கை.. அமைச்சர் தகவல்..