திமுகவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதை கடந்த நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வரும் அவர், நேற்று (பிப்ரவரி 10) எதிர்பாராத விதமாக தனது இல்லத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் விழுந்ததில் ஏற்பட்ட காயங்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பல்லோ மருத்துவமனையின் நிபுணர் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவர் சீரான நிலையில் இருப்பதாகவும், உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் துரைமுருகன் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, துரைமுருகனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். ICU-வில் கால் வலிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இன்னும் சில நாட்கள் அவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



