மனித வாழ்வில் உணவு, உறக்கம் போன்றே உடலுறவும் ஒரு இயல்பான உடல் தேவையாகும். இருப்பினும், தாம்பத்திய உறவு குறித்து தம்பதிகளிடையே பல்வேறு சந்தேகங்களும், தயக்கங்களும் நீடிக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று, “ஒரு சிறந்த உடலுறவு என்பது எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்?” என்பதுதான். இது குறித்துப் பல்வேறு ஆய்வுகளும், பாலியல் நிபுணர்களும் முன்வைக்கும் கருத்துக்கள் பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தருகின்றன.
உடலுறவின் சராசரி கால அளவு : பொதுவாக, தம்பதிகள் உடலுறவில் ஈடுபடும் சராசரி நேரம் 3 முதல் 7 நிமிடங்கள் வரை இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது தனிநபர்களின் உடல்நிலை, மனநிலை மற்றும் அவர்கள் இருக்கும் சூழலைப் பொறுத்து 45 விநாடிகளில் தொடங்கி 45 நிமிடங்கள் வரை கூட மாறுபடலாம். பெரும்பாலான தம்பதிகளுக்கு 4 முதல் 6 நிமிடங்கள் வரை இந்த தருணம் நீடிக்கிறது.
உடலுறவு என்பது வெறும் உடலிணைப்பு (Intercourse) மட்டுமே கிடையாது. அதற்கு முன்னதாக செய்யப்படும் ‘முன்விளையாட்டுகள்’ (Foreplay) ஆகியவற்றை உள்ளடக்கியதே ஒரு முழுமையான தாம்பத்தியம். அவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால், மொத்த நேரமானது இன்னும் கூடுதலாக அமையலாம்.
ஆய்வுகள் சொல்வது என்ன..?
சுமார் 500 ஜோடிகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வில், பல தம்பதிகளுக்கு உடலுறவு என்பது ஒரு சில நிமிடங்களிலேயே முடிந்துவிடுவது கண்டறியப்பட்டது. எனவே, நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டால் தான் அது சிறந்தது என்ற மாயையை இந்த ஆய்வு முடிவுகள் உடைக்கின்றன. தரமான உறவு என்பது நேரத்தை சார்ந்தது மட்டுமல்ல, அது இருவருக்குமிடையிலான புரிதலையும் திருப்தியையும் சார்ந்தது என்பதே உண்மை.
மீண்டும் உறவு கொள்வதற்கான இடைவெளி :
“ஒருமுறை உறவு கொண்ட பிறகு, எவ்வளவு இடைவெளி விட்டு மீண்டும் உறவில் ஈடுபடலாம்?” என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இது குறித்துப் பாலியல் நிபுணர் காமராஜ் அவர்கள் கூறுகையில், தம்பதிகள் எவ்வளவு காலம் இணைந்து வாழ்கிறார்கள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யம் எவ்வளவு என்பதுதான் இந்த இடைவெளியைத் தீர்மானிப்பதாகக் குறிப்பிடுகிறார். புதிதாக திருமணமான தம்பதிகள் என்றால், முதல்முறை உறவு முடிந்த 5 நிமிடங்களிலேயே மீண்டும் இணைய முடியும். ஆனால், வயது மற்றும் காலங்கள் செல்லச் செல்ல இந்த இடைவெளியானது சில நாட்களாக கூட மாறக்கூடும்.
அதேபோல், ஆண்களைப் பொறுத்தவரை விந்து வெளியேறிய பிறகு உடல் ரீதியாக ஓய்வெடுக்கும் மனநிலை இயல்பாகவே உருவாகும். இது ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே, நேரத்தை கணக்கிடுவதை விட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான உறவைப் பேணுவதே தம்பதிகளுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர் ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.



