ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் தினசரி அணியத் தகுந்த ஆடையாக ஜீன்ஸ் உள்ளது. ஜீன்ஸ் மிகவும் வலுவான டெனிம் துணியால் செய்யப்பட்டதால் எளிதில் கிழிவதில்லை. ஒருமுறை வாங்கினால் வருடங்கள் முழுவதும் பயன்படுத்தலாம்.
ஆனால் ஜீன்ஸை எத்தனை நாளுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். குறிப்பாக, டெனீம் போன்ற தரமான ஜீன்ஸை வைத்திருப்பவர்கள் இதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஜீன்ஸை துவைக்கும் போது அதை உள் பக்கம் திருப்பி துவைக்க வேண்டும். தரமான மென்மையான டிடர்ஜெண்ட் பயன்படுத்த வேண்டும். மெதுவாக கையால் துவைப்பது சிறந்தது. வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டிய சூழலில் கூட இதே விதிமுறைகளைப் பின்பற்றினால், ஜீன்ஸ் தனது இயல்பான நிறத்தையும் தரத்தையும் இழக்காது.
அடிக்கடி துவைக்க வேண்டுமா? பலர் ஜீன்ஸை 2–3 முறை அணிந்தவுடன் துவைப்பது வழக்கம். ஆனால், நிபுணர்கள் இது தேவையற்றது என்கிறார்கள். ஜீன்ஸ் பேண்டில் நாற்றம் வரும் வரை அல்லது வெளிப்படையாக அழுக்கு படும் வரை துவைக்க வேண்டிய அவசியமில்லை.
ஜீன்ஸை அணிந்த பிறகு அதில் சேரும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் தோல் செல்கள் மற்றும் இயற்கையான எண்ணெய்கள் தான். இவை உடலுக்கு எந்த பாதிப்பும் தராது. எனவே, அடிக்கடி துவைப்பது ஜீன்ஸின் ஆயுளை குறைக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த பேஷன் ஸ்டைலிஸ்ட் லானா பிளாங்க் கூறுவதாவது, “நீங்கள் ஜீன்ஸை கல்லூரி, அலுவலகம் போன்ற சுத்தமான இடங்களுக்கு மட்டும் அணிந்தால், ஒரு ஜீன்ஸை 10 முறை அல்லது அதற்கும் மேல் பயன்படுத்திய பிறகே துவைக்கலாம்.” என்றார்.
ஜீன்ஸ் எப்பொழுது துவைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடே இல்லை. அது நாற்றமடித்தாலோ, கண்ணில் படும் அளவில் அழுக்காக இருந்தாலோ துவைக்க வேண்டும். இல்லையெனில் தேவையற்ற துவைப்பால் ஜீன்ஸின் நிறம் கெட்டு, துணி விரைவில் சேதமடையும் அபாயம் உண்டு. சரியான முறையில் பராமரித்தால், உங்கள் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் அழகாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.



