இன்றைய அவசர உலகில், 6 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை யாரையும் விட்டுவைக்காமல் வாட்டி வதைக்கும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சனையாக ‘ஒற்றைத் தலைவலி’ (Migraine) உருவெடுத்துள்ளது. உலகளவில் சுமார் 120 கோடி மக்கள் இந்த வலியால் துடித்துக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிடுகின்றன. தலையின் ஒரு பகுதியில் மட்டும் தொடங்கும் இந்த வலி, ஒருவரது அன்றாட வாழ்க்கையையே முடக்கிவிடும் வல்லமை கொண்டது.
ஒற்றை தலைவலியை அதன் தீவிரத்தைப் பொறுத்து ‘எபிசோடிக்’ (Episodic) மற்றும் ‘குரோனிக்’ (Chronic) என இரு வகைகளாக மருத்துவ உலகம் பிரிக்கிறது. இது குறித்து விளக்கும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரெங்கநாதன் ஜோதி, “அடிக்கடி கொட்டாவி வருதல், குமட்டல் அல்லது வாந்தி உணர்வு மற்றும் தலையில் ஊசியால் குத்துவது போன்ற கடுமையான வலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள்” என்கிறார். ஒரு மாதத்தில் 15 நாட்களுக்கு மேலாக தலைவலி நீடித்தால், அது தீவிரமான ‘குரோனிக்’ பாதிப்பாக கருதப்படுகிறது.
காரணங்கள் என்ன..?
மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, திடீர் வானிலை மாற்றங்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால மாற்றங்கள் ஆகியவை ஒற்றை தலைவலியைத் தூண்டும் முக்கியக் காரணிகளாக உள்ளன. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை சரியாக கவனித்துச் செயல்படுவது அவசியமானது. பலரும் தலைவலி வரும்போது சுயமாக மருந்துக் கடைகளில் மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது தற்காலிக நிவாரணம் தந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாதத்தில் 4 நாட்களுக்கு மேல் தலைவலி நீடித்தால், சற்றும் தாமதிக்காமல் நரம்பியல் நிபுணரை அணுகி முறையான ஆலோசனையைப் பெற வேண்டும். ஒற்றை தலைவலிக்கு என்று நிரந்தரத் தீர்வு (Permanent Cure) கிடையாது என்றாலும், முறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் தொடர் சிகிச்சைகள் மூலம் இதன் தீவிரத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆரோக்கியமான உணவு, போதிய உறக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகள் மூலம் ஒற்றை தலைவலியின் பிடியில் இருந்து ஓரளவுக்கு தப்பிக்கலாம்.



