திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சமீபத்தில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “ அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வந்த பிறகே கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்க முடியும். அதற்கு இன்னும் அதிகமான அறிவியல் பூர்வ முடிவு தேவை.” என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்தின் தொன்மையை மத்திய அரசு தொடர்ந்து ஏற்க மறுக்கிறது என்று வரலாற்று ஆய்வாளர்களும், அரசியல் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து , திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை , வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து திமுக மாணவரணி பகிர்ந்த வீடியோவை டேக் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!
நாளை மதுரை வீரகனூரில், திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : ரெடி..! நாளை முதல் துணை தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…!