இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமன்றி, ஒரு முக்கியமான முதலீடாகவும், சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. பண்டிகைகள் மற்றும் திருமணங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ரொக்கமாகப் பணம் கொடுத்துத் தங்கம் வாங்குவதையே பலரும் விரும்புகின்றனர். இருப்பினும், தங்கப் பரிமாற்றங்களில் நடைபெறும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், மத்திய அரசு அவ்வப்போது கடுமையான ஒழுங்குமுறைகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஒரு நபரால் ரொக்கமாக எவ்வளவு தங்கம் வாங்க முடியும், அதற்கு பான் மற்றும் ஆதார் அட்டைகள் அவசியமா என்பது குறித்துப் பார்ப்போம்.
ரொக்கப் பரிவர்த்தனை வரம்பு என்ன..?
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, ஒரு நபர் ரூ.2 லட்சம் மதிப்பு வரையிலான தங்கத்தை மட்டுமே ஒரே நேரத்தில் ரொக்கமாகப் பணம் கொடுத்து வாங்க முடியும். இந்த வரம்பை தாண்டி நீங்கள் தங்கம் வாங்க விரும்பினால், அந்தப் பணப் பரிமாற்றத்தை வங்கிப் பரிவர்த்தனை (Bank Transfer), காசோலை (Cheque), NEFT, RTGS அல்லது டிமாண்ட் டிராஃப்ட் (Demand Draft) போன்ற டிஜிட்டல் முறைகள் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது சட்டமாகும். ரூ.2 லட்சத்துக்கு உட்பட்ட தொகைக்கு ரொக்கமாகத் தங்கம் வாங்கும்போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில நகைக்கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களின் அடையாள விவரங்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
தங்கம் வாங்க பான் கார்டு கட்டாயமா..?
ஆம், ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்கத்தை வாங்குவதற்கு, வாடிக்கையாளர்கள் தங்களது நிரந்தரக் கணக்கு எண்ணை (PAN கார்டு) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத சொத்துக்கள் மற்றும் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, தங்கப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது. தங்க நகை விற்பனையாளர்கள், வாடிக்கையாளரின் பான் விவரங்களைச் சேகரித்து வருமான வரித் துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, நீங்கள் வாங்கும் தங்கத்தின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலும் கூட, அதன் விலை ரூ.50,000-க்கு மேல் இருந்தால், கட்டாயம் பான் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால், அந்தப் பணப் பரிவர்த்தனை ரத்து செய்யப்படலாம்.
ஆதார் வழங்குவது அவசியமா..?
தங்கம் வாங்குவதற்கு எப்போதும் ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டியதில்லை. இருப்பினும், நீங்கள் வாங்கும் தங்கத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறும்போது, ஒரு சில நகைக்கடைக்காரர்கள் அடையாளச் சான்றாக ஆதார் விவரங்களையும் சேகரிக்க வாய்ப்புள்ளது. நிதி மோசடி, வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பணப் புழக்கம் போன்றவற்றைத் தடுப்பதே இதுபோன்ற ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவதன் முக்கிய நோக்கமாகும். தங்கச் சந்தையைச் சீரமைக்கும் அதே வேளையில், டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை ஊக்குவிப்பது மற்றும் ரொக்கப் பணப் பதுக்கலைக் கட்டுப்படுத்துவதுமே அரசின் இலக்காக உள்ளது.



