வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அவர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கான வரிச் சலுகை விதிகளை மத்திய அரசு அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. ‘பேகேஜ் விதிகள் 2026’ என்ற பெயரில் பிப்ரவரி 2 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின்படி, பயணிகள் தங்களது உடைமைகளில் கொண்டு வரும் பொருட்களுக்கான வரி இல்லாத வரம்பு (Duty-free Allowance) கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த பழைய விதிகளுக்குப் பதிலாக, தற்போதைய காலத்திற்கு ஏற்ப இந்த புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய மாற்றமாக, இந்திய குடிமக்கள் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும்போது, அவர்கள் கொண்டு வரும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய் 75,000 வரை இருந்தால் அதற்கு சுங்க வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன்னால் இந்த வரம்பு ரூபாய் 50,000 ஆக மட்டுமே இருந்தது. இப்போது கூடுதலாக 25,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வரி இல்லாமல் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த வரம்பு ரூபாய் 25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகளை விரும்பி அணியும் இந்தியர்களுக்கு இந்த புதிய விதிகள் பெரிய ஆறுதலை தந்துள்ளன. ஓராண்டிற்கும் மேலாக வெளிநாட்டில் தங்கிவிட்டு தாயகம் திரும்பும் பெண்களாக இருந்தால், அவர்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை எவ்வித வரியும் இன்றி கொண்டு வரலாம். ஆண்களாக இருந்தால் 20 கிராம் வரை நகைகளை வரி இல்லாமல் கொண்டு வர அனுமதி உண்டு. ஆனால், இந்த நகைகள் அனைத்தும் உங்களது சொந்தப் பயன்பாட்டிற்காக மட்டுமே இருக்க வேண்டும். அவற்றை வியாபார நோக்கத்திற்காகவோ அல்லது விற்பனைக்காகவோ கொண்டு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : அமெரிக்கா விதித்த செக்.. இந்தியாவின் அதிரடி மூவ்..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு தகவல்..!!



