இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார ஊடக அதிபர்களில் ஒருவரான சன் டிவி நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறன் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். ஆனால் இந்த முறை, அவரின் மிகப்பெரிய சம்பளத்திற்காக அல்ல. தனது இளைய சகோதர் தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் காரணமாக..
திமுக எம்.பி. தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளார். 2003 ஆம் ஆண்டு தங்களின் தந்தையும் ஊடக அதிபர் முரசொலி மாறனின் மரணத்தைத் தொடர்ந்து, சன் குழும சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டை மோசடியாகக் கைப்பற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கலாநிதி, அவரது மனைவி காவேரி மாறன் மற்றும் 7 பேர் முறையான அங்கீகாரம் இல்லாமல் குடும்பத்தின் ஊடக வணிகத்தை கைப்பற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சரி, கலாநிதி மாறனின் சம்பளம் எவ்வளவு, அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கலாநிதி மாறன், காவேரி மாறன் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?
ஜூன் 20, 2025 நிலவரப்படி, அவரது நிகழ்நேர நிகர மதிப்பு $2.8 பில்லியனாக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.24,248 கோடி ஆகும். ஃபோர்ப்ஸ் பணக்கார பட்டியலில் அவர் உலகளவில் 1,357வது இடத்தில் இருக்கிறார். 2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அவர் 83 வது இடத்தைப் பிடித்தார்.
கலாநிதி மாறன் 1993 இல் சன் டிவி நெட்வொர்க்கைத் தொடங்கினார். இன்று, சன் டிவி 37 தொலைக்காட்சி சேனல்களை கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் 140 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் பார்க்கப்படும் சேனலாக உள்ளது.. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சன் நியோ என்ற இந்தி பொது பொழுதுபோக்கு சேனலைத் தொடங்குவதன் மூலம் அதன் இருப்பை விரிவுபடுத்தியது.
சன் டிவி நெட்வொர்க் வானொலி, செய்தித்தாள்கள் மற்றும் நேரடி-வீட்டு (DTH) ஒளிபரப்பிலும் முன்னிலையில் உள்ளது. சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளடக்கத்தை மேற்பார்வையிடும் அவரின் மனைவி காவேரி கலாநிதி மாறனும் நிறுவனத்திடமிருந்து தொடர்ந்து அதிக சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.
6 ஆண்டுகளாக (நிதியாண்டு 2018 முதல் நிதியாண்டு 2023 வரை), இருவரும் தலா ரூ.87.50 கோடி வருடாந்திர ஊதியத்தைப் பெற்றுள்ளனர்.
அவர்களின் ஊதிய அமைப்பில் பின்வருவன அடங்கும்:
நிலையான சம்பளத்தில் ரூ.13.87 கோடி
போனஸ் அல்லது கருணைத் தொகையாக ரூ.73.63 கோடி.
இந்த ஜோடி இருவரும் சேர்ந்து ஆண்டுதோறும் ரூ.175 கோடி சம்பாதிக்கின்றனர். இதன் மூலம் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாக இரட்டையர்களாக இவர்கள் உள்ளனர். இதில். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கோவிட் தொற்றுநோய் காலம் உட்பட பல ஆண்டுகளாக இந்த தொகை மாறாமல் உள்ளது.
Read More : கலாநிதி Vs தயாநிதி : “குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை..” சன் டிவி விளக்கம்..