தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தங்கத்தை அவசர தேவைகளுக்கான முக்கிய நிதி ஆதாரமாகப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடம் குறையவில்லை. தேவைப்படும்போது உடனடியாகப் பணமாக மாற்ற முடியும் என்பதாலும், வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்பதாலும், தங்க நகைக்கடனுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது. இந்தக் கடன் நடைமுறையில் ஆவணங்களோ, அதிக சிக்கல்களோ இல்லை என்பதால், சாமானியர்கள் தங்க நகைக்கடன் பெறுவதையே அதிகம் விரும்புகின்றனர்.
தேசிய வங்கிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றிலும் நகைக்கடன் வழங்கப்படுகிறது. இருப்பினும், கடந்த சில காலமாகத் தனியார் வங்கிகளை ஒப்பிடும்போது, கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராமுக்குக் கொடுக்கப்படும் கடன் தொகை குறைவாகவே இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.
ஒரு கிராமுக்கு ரூ.6,000 மட்டுமே வழங்கப்பட்டதால், தங்கத்தின் விலை உயர்ந்தாலும் குறைவாகவே கடன் கிடைத்தது. இதனால், பல வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகைக்காகத் தனியார் வங்கிகளை நாடத் தொடங்கினர். அத்துடன், பெங்களூரு போன்ற மற்ற மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராமுக்கு ரூ.7,500 முதல் ரூ.7,800 வரை கடன் வழங்கப்படுவதும் தெரியவந்தது.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றும், கூட்டுறவு வங்கிகள் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளன. இதுவரை ஒரு கிராமுக்கு ரூ.6,000 வழங்கி வந்த நிலையில், தற்போது அதிகரித்து வரும் தங்கத்தின் மதிப்புக்கு ஈடாக நகைக்கடன் தொகையை உயர்த்த உள்ளதாக அறிவித்திருந்தன.
அதன்படி, கடந்த நவம்பர் 17-ஆம் தேதி முதல், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் ஒரு கிராமுக்கு வழங்கப்பட்டு வந்த நகைக்கடன் தொகை ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்துள்ளார். தங்கத்தின் விலை உயர்ந்த போதிலும், கடன் தொகை குறைவாக இருந்ததால் ஏற்பட்ட நிதிச் சிரமத்தைப் போக்கும் வகையிலும், மக்களுக்கு இது கூடுதல் நிதியுதவியாக அமையும் என்ற எதிர்பார்ப்பிலும் இந்தக் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.



