இந்தியாவில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் விதமாக ஒன்றிய, மாநில அரசுகள் பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்திய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் விதமாக ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நீட்டிப்பு திட்டமான ஆயுஷ்மான் வய வந்தனா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2024 அக்டோபரில் தொடங்கி வைத்தார்.
இந்த ஆயுஷ்மான் கார்டை வைத்திருப்பவர்கள் ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சையைப் பெறலாம். 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், ஏற்கனவே உள்ள அனைத்து உடல் நல பிரச்சனைகள் உட்பட, கிட்டத்தட்ட 2,000 மருத்துவ நடைமுறைகளுக்கான சிகிச்சையை உள்ளடக்கி, காத்திருப்பு காலம் இல்லாமல் செயல்படுகிறது.
இந்த அட்டையை யார் பெறலாம்? 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எந்த இந்தியக் குடிமகனும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் PM-JAY இன் கீழ் உள்ளவர்களும் இதை பெறலாம். இது அவர்களின் காப்பீட்டை இரட்டிப்பாக்குகிறது. தனியார் நிறுவனங்களிடமிருந்து சுகாதார காப்பீட்டைப் பெற்றவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள். இருப்பினும் அவர்கள் ஏற்கனவே உள்ள சலுகைகளுக்கும் இந்த புதிய சலுகைக்கும் இடையில் தேர்வு செய்ய வேண்டும்.
முக்கிய நன்மைகள்:
* ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு
* 27 சிறப்புப் பிரிவுகளில் 1,961 மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கியது.
* முதல் நாளிலிருந்து ஏற்கனவே உள்ள அனைத்து நோய்களும் அடங்கும்.
* 13,352 தனியார் மருத்துவமனைகள் உட்பட 30,000க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை.
ஆயுஷ்மான் வே வந்தனா அட்டையை எப்படி பெறுவது:
* கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து ‘ஆயுஷ்மான் செயலியை’ பதிவிறக்கவும்.
* பயனாளியாக அல்லது ஆபரேட்டராக லாக் இன் செய்ய கிளிக் செய்யவும்.
* மொபைல் எண் மற்றும் அங்கீகார முறையை உள்ளிடவும்.
* OTP, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, லாக் இன் என்பதைக் கிளிக் செய்யவும்.
* சாதனத்தின் இருப்பிடத்தை அணுக அனுமதிக்கவும்.
* பயனாளியின் விவரங்களை உள்ளிடவும்
* ஒரு டிக்லரேஷனை வழங்கவும், தேவையான புலங்களை நிரப்பவும்.
* பயனாளியின் மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிடவும்
* வகை மற்றும் PIN குறியீடு உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும்.
* குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைச் சேர்த்து சமர்ப்பிக்க தொடரவும்
* e-KYC முடிந்ததும், நீங்கள் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையை ஒப்புதலுக்குப் பிறகு பதிவிறக்கம் செய்ய முடியும்.
என்ன சிகிச்சைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன?
- ஹீமோடையாலிசிஸ்/பெரிட்டோனியல் டயாலிசிஸ்
- முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்
- PTCA மற்றும் இதயமுடுக்கி பொருத்துதல்கள் உள்ளிட்ட இருதயவியல் சிகிச்சைகள்
- பக்கவாதம் மற்றும் புற்றுநோய் பராமரிப்பு
- எலும்பியல் அறுவை சிகிச்சைகள்
அட்டையை எங்கே பயன்படுத்தலாம்? இந்தத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட 30,072 மருத்துவமனைகளில் எதிலும் சிகிச்சை பெறலாம், இதில் இந்தியா முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளும் அடங்கும்.