பிரசவம் என்பது பெண்களுக்கு ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல, உடல் மற்றும் மனதளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு மறுபிறப்பு என்றே சொல்லலாம். கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்கள் உணவு, உடற்பயிற்சி மற்றும் ஓய்வு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால், “கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?” என்ற கேள்வி பல தாய்மார்களின் மனதில் எழுவதுண்டு. இந்த கேள்விக்கு நடிகை மலாய்கா அரோராவின் அனுபவமும், மகப்பேறு நிபுணர்களின் கருத்துக்களும் ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்கின்றன.
பிரபல நடிகை மலாய்கா அரோரா, தனது மகன் அர்ஹான் கான் கர்ப்பத்தில் இருந்தபோது 9 மாதங்களும் சுறுசுறுப்பாக இருந்ததாகக் கூறுகிறார். “கர்ப்ப காலத்தில் ‘இரண்டு பேருக்காக சாப்பிட வேண்டும்’ என்பது ஒரு தவறான கருத்து. எனக்குப் பிடித்த உணவை அளவாகச் சாப்பிட்டேன்” என்று அவர் தெரிவித்தார். மேலும், கர்ப்பகாலம் முழுவதும் நடைப்பயிற்சி, யோகா, நீச்சல் போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ததாகவும், இது அவரை மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியதாகவும் கூறினார். இதன் விளைவாக, அவர் கர்ப்ப காலத்தில் அதிக எடை கூடாமல் சரியான உடல் எடையுடன் இருந்தாராம்.
டெல்லியில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் தலைமை ஆலோசகர் டாக்டர் மஞ்சுஷா கோயல் கூறுகையில், கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பது ஒரு தாயின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று வலியுறுத்துகிறார். கர்ப்ப காலத்தில் வழக்கமான உடல் செயல்பாடுகள் ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க உதவுகின்றன.
மேலும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், தசைகளை பலப்படுத்தி, சகிப்புத்தன்மையை அதிகரிக்கின்றன. இந்த நன்மைகள் அனைத்தும் பிரசவ செயல்முறைக்கு மிகவும் உதவுகின்றன. உடல் பிரசவத்தின் சவால்களை எதிர்கொள்ள சிறப்பாகத் தயாராவதால், பிரசவத்திற்குப் பிந்தைய மீட்சியும் விரைவடையும்” என்று டாக்டர் கோயல் விளக்கினார்.
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது முதுகுவலியைக் குறைப்பதோடு, சரியான தோரணையையும், பிரசவத்திற்குப் பின் சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டையும் மேம்படுத்த உதவுகிறது. சுறுசுறுப்பாக இருக்கும் தாய்மார்கள் சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைப்பதோடு, நல்ல தூக்கத்தையும் அனுபவிக்கின்றனர்.
முக்கியமாக, கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பது கர்ப்பகால நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற ஆபத்துகளைக் குறைக்கிறது. இது உடலை விரைவாக மீண்டும் கர்ப்பத்திற்கு முந்தைய உடற்தகுதி நிலைகளுக்குத் திரும்ப உதவுகிறது, பிரசவம் எந்த முறையில் நடந்தாலும், ஒவ்வொரு தாயும் தனது சுகாதார நிபுணரின் ஆலோசனையின்படி, பாதுகாப்பாகவும் திறம்படவும் உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.